உச்ச நீதிமன்றத்தை நாடிய எடப்பாடி
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுகவின் சட்ட விதிகளின்படி பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை தனி தீர்மானம் கொண்டு வந்து ஒற்றைத் தலைமையை உருவாக்கவோ பொதுச்செயலாளர் ஆகவோ இடம் இல்லை. அப்படி நிறைவேற்றினால் அதிமுகவின் சட்ட விதிகளின் படி அது செல்லாது. அதனால் அதிமுகவின் பொதுக்குழுவில் தனி தீர்மானம் ஒற்றைத் தலைமை தீர்மானம் எதையும் கொண்டு வரக்கூடாது என்று ஓபிஎஸ் தரப்பு சொல்லி வந்த நிலையில், கொண்டு வந்தே தீருவோம் என்று எடப்பாடி தரப்பு உறுதியாக சொல்லி வந்ததால், ஓபிஎஸ் தரப்பு உயர் நீதிமன்றத்தினை நாடியது.
ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முதலில் எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்தது. இதன் பின்னர் அன்று இரவே 11 மணிக்கு அவசரமாக மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலின் படி உடனடியாக மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட இரண்டு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதி அளித்த தீர்ப்பை ரத்து செய்து, ஓபிஎஸ் சார்பில் கோரிக்கையை ஏற்று உத்தரவிட்டது. சிறப்ப பொதுக்குழுவில் வரைவு செய்யப்பட்ட 23 தீர்மானங்களை தவிர புதிதாக எந்த தீர்மானங்களையும் நிறைவேற்றக்கூடாது. புதிய முடிவுகளையும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டது. ஆனால் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டு 23 தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம் என்று அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு உள்ளனர். அதிமுகவின் அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் அவர் மூலமாகவே அடுத்த பொது குழுவை அறிவித்தது என்று உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மீறி செயல்பட்டனர்.
இதையடுத்து எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது . மேலும் ஓபிஎஸ் இப்போது ஒருங்கிணைப்பாளர் இல்லை. அவர் பொருளாளர் மட்டுமே என்று சொல்லும் எடப்பாடி தரப்பு , அந்த பொருளாளர் பதவியையும் பறிக்க திட்டம் போட்டு வருவதாக தகவல்.
சட்ட விதிகளை பின்பற்றாமல் கடந்த பொதுக்குழு நடந்தது. மீண்டும் ஒரு பொதுக்குழுவை கூட்ட இருக்கிறார்கள். எனது ஒப்புதல் இல்லாமல் நடைபெறுகிறது இந்த பொதுக்குழு . இது அதிமுக சட்ட விதிகளுக்கு புறம்பானது என்று தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார் ஓபிஎஸ். இதனால் எடப்பாடி ஆதரவாளர்கள் திட்டமிட்டபடி அதிமுக பொதுக் குழு 11ல் கூடுமா என்று சந்தேகம் எழுந்திருக்கிறது.
இந்த நிலையில் இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார். பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்து இருக்கிறார். பொதுக்குழு, செயற்குழு விவகாரங்களில் தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை. பொதுக்குழுவில் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தாது என்று உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்திருக்கிறார்.