மேல்முறையீட்டிற்கு செல்லும் எடப்பாடி டீம்

 
ed

ஓ. பன்னீர் செல்வத்திடம் மூன்று நாட்கள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கும் தமிழ்மகன் உசேன்,  எடப்பாடி பழனிச்சாமி சொன்னால் மீண்டும் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று சொல்லியிருக்கிறார்.  அதே நேரம் ஒற்றை தலைமைக்கு எதிராக  ஓபிஎஸ் தரப்பு வாங்கிய ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 சென்னை வானகரத்தில் இன்று நடந்த அதிமுக பொதுக்குழுவில் புதிய அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   இதை அடுத்து பொதுக்குழு உறுப்பினர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்குச் சென்று அவரை சந்தித்துவிட்டு வெளியே வந்தவர் செய்தியாளர்களிடம் பேசினார்.  அப்போது அதிமுக பொதுக்குழுவில் நடந்த களேபரம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.  குறிப்பாக ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசி அடிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

poo

 அதற்கு தமிழ்மகன் உசேன்,  ‘’ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதை நான் பார்க்கவில்லை’’என்றார்.   அவர் மேலும்,  ‘’பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவு ஒற்றை தலைமை வேண்டும் என்பதுதான் அது நிறைவேறும்.   அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி வருவதற்காக சூழ்நிலைகள் இருக்கிறது . அடுத்த பொதுக்குழுவிற்கான தீர்மானங்களை ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர்,  துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசித்து முடிவு செய்வார்கள்’’ என்றார்.

மேலும் ,  ‘’அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பொதுக்குழுவில் எந்த பிரச்சனையும் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை . ஏனென்றால் தற்போது வழங்கப்பட்டிருக்கும் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு போக வாய்ப்பு இருக்கிறது.  ஆனால் அது தொடர்பான எந்த ஆலோசனையும் தற்போது நடைபெறவில்லை’’என்றார்.

ஓபிஎஸ்சிடம்  பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு,   ஓபிஎஸ் இடம் மூன்று நாட்கள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறேன்.  மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தச் சொல்லி எடப்பாடி பழனிச்சாமி சொன்னால் நான் மீண்டும் ஓபிஎஸ்-ஐ சந்தித்து பேச தயார்’’ என்று தெரிவித்திருக்கிறார்.