எடப்பாடியும் மீண்டும் கடிதம் - தொடரும் போட்டா போட்டி
ஓ. பன்னீர்செல்வத்தை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியும் மீண்டும் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் சபாநாயகருக்கு இரண்டாவது முறையாக கடிதம் எழுதி இருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம். எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்கிற அடிப்படையில் சட்டசபையின் அலுவல் குழுவில் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி மீண்டும் கடிதம் எழுதி இருக்கிறார் எடப்பாடி.
சட்டப்பேரவை கூட்டம் 17ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதை முன்னிட்டு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் , எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்கிற முறையில் சபாநாயகருக்கு ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பை சுட்டிக்காட்டி அந்த கடிதத்தை எழுதியிருக்கிறார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்து இருக்கிறார்.
இதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமியும் சபாநாயகருக்கு மீண்டும் கடிதம் அனுப்பி இருக்கிறார். ஓ. பன்னீர்செல்வத்திற்கு பதிலாக எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என்று சபாநாயகர் அப்பாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி இருந்தார். தற்போது மீண்டும் சபாநாயகர் அப்பாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி எழுதி இருக்கும் கடிதத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்கிற அடிப்படையில் சட்டசபையில் அலுவல் ஆய்வு குழுவில் ஆர்பி உதயகுமார் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி இருக்கிறார்.