நான் பேச ஆரம்பித்தால் பூகம்பம் ஏற்படும்.. உத்தவ் தாக்கரேவுக்கு மறைமுக மிரட்டல் விடுத்த ஏக்நாத் ஷிண்டே

 
ஏக்நாத் ஷிண்டே

நான் பேச ஆரம்பித்தால் பூகம்பம் ஏற்படும் என்று உத்தவ் தாக்கரேவுக்கு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மறைமுகமாக மிரட்டல் விடுத்தார்.

சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கிளர்ச்சி சிவ சேனா எம்.எல்.ஏ.க்களை அடிக்கடி துரோகிகள் என்று கூறி வருகிறார். இந்நிலையில், நான் பேச ஆரம்பித்தால் நிலநடுக்கம் ஏற்படும் என்று உத்தவ் தாக்கரேவுக்கு ஏக்நாத் ஷிண்டே மறைமுக மிரட்டல் விடுத்தார். மாலேகானில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசுகையில் கூறியதாவது: நான் பேட்டி கொடுக்க  ஆரம்பித்தால் பூகம்பம் வரும். 

உத்தவ் தாக்கரே

சிலரைப் போல் நான் ஆண்டுதோறும் விடுமுறைக்காக வெளிநாடுகளுக்கு சென்றதில்லை. சிவ சேனாவும் அதன் வளர்ச்சியும் மட்டுமே என் மனதில் இருந்தது. பாலாசாகேப் தாக்கரேவின் பாரம்பரியத்தை பாதுகாக்க விரும்பியதால் கிளர்ச்சி செய்தேன். முதல்வராக வருவதற்காக பாலாசாகேப்பின் சித்தாந்தத்துடன் சமரசம் செய்பவர்களை நீங்கள் என்னவென்று அழைக்கிறீர்கள்? பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்ட சிவ சேனா, எப்படி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸூடன் இணைந்து ஆட்சி அமைத்தது?. இது துரோகம் இல்லையா?. 

பா.ஜ.க.

எதிர்வரும் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 288 இடங்களில் 200 தொகுதிகளில் பா.ஜ.க.வும், எனது தலைமையிலான சிவ சேனாவும் வெற்றி பெறும். 2002ல் சாலை விபத்தில் மறைந்த சிவ சேனாவின் மூத்த தலைவரும், எனது வழிகாட்டியுமான ஆனந்த் திகேவுக்கு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும். தர்மவீரருடன் நடந்தற்கு நான் சாட்சியாக இருந்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.