மகா விகாஸ் அகாடி அரசின் பிடியில் இருந்து சிவ சேனாவையும் அதன் தொண்டர்களையும் காப்பாற்ற போராடுகிறேன்.. ஏக்நாத் ஷிண்டே

 
ஏக்நாத் ஷிண்டே

மகா விகாஸ் அகாடி அரசின் பிடியில் இருந்து சிவ சேனாவையும் அதன் தொண்டர்களையும் காப்பாற்ற போராடுகிறேன் என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் சிவ சேனாவின் செல்வாக்கு மிக்க தலைவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அந்த கட்சியை சேர்ந்த சுமார் 42 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்  கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் இல்லையென்றால் சிவ சேனா பிளவு ஏற்படும் என உத்தவ் தாக்கரேவுக்கு எச்சரிக்கை விடுத்தனர். சிவ சேனா கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் அசாம் மாநிலத்தில் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளனர். இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே உள்பட கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் பதவியை பறிக்கும் நடவடிக்கையில் சிவ சேனா இறங்கியது. 16 எம்.எல்.ஏ.க்களின் பதவியை ஏன் பறிக்கக்கூடாது என்று கேட்டு துணை சபாநாயகர் 16 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார்.

உத்தவ் தாக்கரே

27ம் தேதி (இன்று) மாலை 5.30 மணிக்குள் பதில் அளிக்க  வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த சூழ்நிலையில், மகா விகாஸ் அகாடி அரசின் பிடியில் இருந்து சிவ சேனாவையும் அதன் தொண்டர்களையும் விடுவிக்க நான் விரும்புகிறேன் என சிவ சேனா தொண்டர்களுக்க ஏக்நாத் ஷிண்டே விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே டிவிட்டரில், மகா விகாஸ் அகாடி அரசின் பிடியில் இருந்து சிவ சேனாவையும் அதன் தொண்டர்களையும் விடுவிக்க நான் விரும்புகிறேன் என்பதையும், அதற்காகவே நான் போராடி வருகிறேன் என்பதையும் சிவ சேனா தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த போராட்டம் கட்சி தொண்டர்களின் முன்னேற்றத்துக்கானது என பதிவு செய்து இருந்தார். மேலும் ஏக்நாத் ஷிண்டே கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் இருவர் பேசியுள்ள வீடியோவையையும் டிவிட் செய்து இருந்தார்.

கிளர்ச்சி சிவ சேனா எம்.எல்.ஏ.க்கள்

சிவ சேனா கிளர்ச்சி எம்.எல்.ஏ. சிமன்ராவ் பாட்டீல் அந்த வீடியோவில், நமது பாராம்பரிய எதிரிகள் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ், அவர்கள்தான் தொகுதிகளில் நமது முதன்மையான போட்டியாளர்கள். இயற்கையான கூட்டணி அமைய வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் கோரிக்கை வைத்தோம் என தெரிவித்துள்ளார். மற்றொரு சிவ சேனா கிளர்ச்சி எம்.எல்.ஏ. மகேஷ் ஷிண்டே கூறுகையில், சிவ சேனாவை ஒழிக்க தேசியவாத காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. நாம் தோற்கடித்த தேசியவாத காங்கிரஸின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ.க்களான நாங்கள் தேசியவாத காங்கிரஸின் அநீதி குறித்து முதல்வரிடம் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. எனவே சிவ சேனாவை காப்பாற்ற இந்த பெரிய பங்கை வகிக்குமாறு ஏக்நாத் ஷிண்டேவிடம் வலியுறுத்தினோம் என தெரிவித்தார்.