யாகூப் மேமனின் ஏஜெண்டாக இருப்பதை விட மோடி மற்றும் அமித் ஷாவின் ஏஜெண்டுகளாக இருப்பது நல்லது.. ஏக்நாத் ஷிண்டே

 
அமித் ஷா, மோடி

யாகூப்  மேமனின் ஏஜெண்டாக இருப்பதை விட மோடி மற்றும் அமித் ஷாவின் ஏஜெண்டுகளாக இருப்பது நல்லது என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

சிவ சேனா தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே மும்பையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில் கூறியதாவது: யாகூப் மேமன் ஒரு துரோகி. அவர் தூக்கிலிடப்பட்டார். அவரது கல்லறை மகிமைப்படுத்தப்பட்டது. இது யாருடைய ஆட்சியில் நடந்தது?. யாகூப்  மேமனின் ஏஜெண்டாக இருப்பதை விட மோடி மற்றும் அமித் ஷாவின் ஏஜெண்டுகளாக இருப்பது நல்லது. அவர்கள் பாலாசாகேப் தாக்கரேவின் சித்தாந்தத்தை முன்னெடுத்து சென்றவர்கள் மற்றும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏக்நாத் ஷிண்டே

1993 மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனின் கல்லறை மார்பிள் கல் மற்றும் எல்.இ.டி. விளக்குகள் மூலம் புனரமைக்கப்பட்டு, அழகுப்படுத்தியிருப்பதாக  தகவல் வெளியானது. அந்த கல்லறையில் எல்.இ.டி. விளக்குகள் கடந்த மார்ச் 18ம் தேதி நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் மகா விகாஸ் அகாடி அரசாங்கம்  ஆட்சியில் இருந்தது.

யாகூப் மேமனின் கல்லறை

இதனையடுத்து முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை பா.ஜ.க. கடுமையாக தாக்கியது. அதேசமயம், தன் மீதான குற்றச்சாட்டுக்களை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா பிரிவு மறுத்தது. மேலும், யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட நாக்பூர் சிறையில் அவரது உடலை அடக்கம் செய்யாததற்காக அப்போது முதல்வராக இருந்த தேவேந்திர பட்னாவிஸை சிவ சேனாவின் அரசியல் ஊதுகுழலான சாம்னா பத்திரிகையின் தலையங்கத்தில் தாக்கி எழுதப்பட்டுள்ளது.