எட்டப்பன் கேபி முனுசாமி - எகிறி அடிக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்
ஓ. பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த கே. பி. முனுசாமி தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார் . எல்லோரும் ஒன்று பட்டு செயல்படுவோம் என்று ஓ. பன்னீர்செல்வம் விடுத்து அழைப்பை நிராகரித்ததோடு மட்டுமல்லாமல் அவரைக் கடுமையாக சாடி வருகின்றனர் எடப்பாடியும் அவரது தரப்பினரும்.
கே.பி. முனிசாமி, ஓ. பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். பன்னீர் செல்வத்தை விமர்சிப்பதற்கு கூட நாங்கள் வெட்கப்படுகிறோம் என்று அவர் கடுமையாக சாடி இருக்கிறார் . ‘’பன்னீர்செல்வம் எங்களை ஒன்றாக செயல்படலாம் வாருங்கள் என்று அழைக்கிறார். அப்படி அழைப்பதற்கு அவருக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை. அதுமட்டுமல்ல, பன்னீர்செல்வம் அரசியலில் இருப்பதுக்கே தகுதியற்றவர். ஜெயலலிதா மறைந்த பின்னர் சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் எந்தவித சூழ்நிலையிலும் இந்த கட்சியில் சேர்த்து விடக் கூடாது. நான் உயிருள்ளவரை அவர்களை சேர்க்க மாட்டேன் என்றார். ஆனால் இப்போது மாறிவிட்டார்.
பன்னீர்செல்வம் ஒரு இயக்கத்தில் கடுமையாக போராடி பல சோதனைகளை சந்தித்து பல அவமானங்களை சந்தித்து இந்த நிலைக்கு வந்திருந்தால் அவர் தெளிவான முடிவெடுக்க வாய்ப்பு இருக்கிறது. அவர் ஒருவரின் பின்னாலேயே இருந்து வந்தவர். அவர் சொல்வதைக் கேட்டு கேட்டு செயல்பட்டவர். சுய சிந்தனை இல்லாதவர். அந்த சுய சிந்தனை இல்லாதவர் இப்படித்தான் பேசுவார். அவருக்கு சுயமாக சிந்திக்க தெரிகிறதோ இல்லையோ சுயநலக்காரராக இருக்கிறார். அதிமுகவில் பன்னீர்செல்வம் இருப்பதை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது . அப்படிப்பட்ட நபரை விமர்சிக்க கூட நாங்கள் வெட்கப்படுகிறோம்’’ என்று கடுமையாக சாடி இருக்கிறார்.
கே. பி. முனுசாமி பேச்சுக்கு பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பதிலடி கொடுத்திருக்கிறார். பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்பட்டது. ஓபிஎஸ் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அவரது மனைவியின் உருவப்படத்திற்கு கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, ‘’தர்மயுத்தம் நடத்தியபோது பன்னீசெல்வத்தை அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி நயவஞ்சகமாக கூட்டு சேர்ந்து காலை வாரிவிட்டு விட்டார்.
பன்னீர்செல்வத்திடம் ஆதரவு தெரிவித்து இருந்த செம்மலை உட்பட யாருக்கும் தேர்தலில் வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டார். தர்ம யுத்தம் நடத்திய போது ஓபிஎஸ்க்கு 45 சதவிகிதம் பேர் ஆதரவாக இருந்தார்கள். பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்திய போது உடன் இருந்த கேபி முனுசாமி இப்போது எட்டப்பன் வேலை பார்க்கிறார். கட்சியில் குழப்பங்களை ஏற்படுத்தி விட்டு கட்யை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்று விட்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது பன்னீர்செல்வத்தை தான் நிகழ்கால பரதன் என்று கூறினார். ஓபிஎஸ் அணியில் எடப்பாடி பழனிச்சாமி தவிர மற்ற அனைவரும் இணையலாம் . எடப்பாடி பழனிச்சாமி திருந்த வேண்டும். இல்லை என்றால் ஒன்றரை கோடி தொண்டர்களும் சேர்ந்து தான் அவரை திருத்த வேண்டும்’’ என்றார் கடுமையாக.