அமித்ஷாவின் அறிக்கையில் கூட இந்திக்குத்தான் முதலிடம் -அமைச்சர் பொன்முடி ஆவேசம்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி அன்று முழிப்போர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினரும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சென்னையில் அம்பத்தூரில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
பின்னர் நிகழ்வின் மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி பேசும்போது, தமிழ்நாடு என்று சொல்ல வேண்டும் என்பதற்காக இந்தியா வரலாற்றிலேயே சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் நம் முதல்வர் . இப்பொழுது தமிழ்நாட்டில் தமிழை ஒழிக்கவும் இந்தி மொழியை திணிக்கவும் பாஜக அரசு முயற்சி செய்கின்றது. எந்த மொழியையும் நாம் கற்றுக் கொள்ளலாம். ஆனால் கட்டாயப்படுத்தி திணிக்க கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாடு முதல்வர் போராடி வருகிறார் என்றார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, மத்திய அரசு இந்தியை திணிப்பதற்காக பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றது. புதிய கல்விக் கொள்கையாக இருந்தாலும் நிதி ஒதுக்குவதாக இருந்தாலும் எப்படியாவது இந்தியை திணிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் செயல்படுகின்றார்கள். அமித்ஷா அறிக்கையில் கூட இந்திக்கு தான் முதலிடம் என சொல்லி இருக்கிறார் . இதை எல்லாம் தடுத்து நிறுத்தி அந்தந்த மாநில மொழிகள் வளர வேண்டும் என்கிற அடிப்படையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தமிழுக்காக மட்டுமல்ல அந்தந்த மாநில மொழிகளுக்காகவும் குரல் கொடுத்து முதலமைச்சர் ஆக திகழ்கின்றார் என்றார்.