மாஜி அமைச்சர் உதயகுமார் விரட்டியடிப்பு - பசும்பொன்னில் பரபரப்பு

 
u

 பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் எடப்பாடியார் வாழ்க என்று கோஷமிட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விரட்டி அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் அறுபதாம் ஆண்டு குருபூஜை விழா இன்று காலை தொடங்கியது.    இன்று முதல் 30ஆம் தேதி வரை மூன்று நாட்களிலும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.   30 ஆம் தேதி அரசு விழாவாக நடைபெற இருக்கிறது.

uu

 பல்வேறு தலைவர்களும் பசும்பொன் சென்று முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.   தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்க வங்கிப் பெட்டகத்தில் இருந்து கவசத்தை  தன்னிடம் கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி -ஓ .பன்னீர்செல்வம் தரப்பினர் கடும் போட்டியில் இருந்தனர்.

 கடைசியில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கின் விசாரணை முடிவில்,  கட்சியின் உட்கட்சி பூசலில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. அதனால் தங்க கவசத்தை ராமநாதபுரம் டிஆர்ஓ காமாட்சி கணேசனிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது  நீதிமன்றம்.  

இதனால் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி செல்லவில்லை.   எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.   அப்போது அவரும் அவரது ஆதரவாளர்களும் ‘’எடப்பாடி யார் வாழ்க’’ என்று முழக்கமிட்டார்கள்.

 இதைக் கேட்டதும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.    அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்கின்ற இடத்தில் எடப்பாடி பழனிச்சாமியை புகழ்ந்து கோஷம் போட்டது மலிவான அரசியல் விளம்பரம் என்று ஆவேசமடைந்தார்கள்.   உடனே,  உதயகுமாரை வெளியேறச் சொல்லி கோஷம் போட்டார்கள்.    இதனால் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.   பின்னர் போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி வெளியேற்றினர்.