தவிர்த்த ஸ்டாலின் -தவித்த துரைமுருகன்
முதல்வர் ஸ்டாலின் தவிர்த்ததால் கடைசி நிமிடம் வரைக்கும் தவித்திருக்கிறார் துரைமுருகன். இதனால் முதல்வர் ஸ்டாலின் மீது கடும் அதிருப்தியில் உள்ளாராம் துரைமுருகன். தன் துறை சம்பந்தப்பட்ட நிகழ்வுக்கு தன்னை அழைக்காமல் போன வருத்தத்தை விடவும் வேறு துறை அமைச்சர்களை அழைத்து சென்றதால்தான் முதல்வர் மீது கடும் அதிருப்தியாம்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடி பருவம் துவங்கியிருக்கிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே பாசன தேவைக்கு நீர் திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த நீர் உற்பத்தியை பயன்படுத்தி நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அரசு திட்டமிட்டிருக்கிறது. அதனால் கடைமடை பகுதிகளுக்கு உரிய நேரத்தில் நீர் சென்று சேருவதற்காக டெல்டா மாவட்ட நீர் வழித்தடங்களை தூர் வாருவதற்கு 80 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிதியில் இருந்து 4900 கிலோ மீட்டர் நீர் வழித்தடங்களை தூர்வாரும் பணிகள் ஏப்ரல் மாதத்தில் துவங்கப்பட்டன. ஆனால் இந்தப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. ஆனால், இந்த பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டார்.
நீர்வளத் துறை உயரதிகாரிகள் முதல்வர் அலுவலகத்திற்கு தகவல் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் தூர்வாரும் பணிகள் முடியாததால் டெல்டா விவசாயிகள் அதிருப்தியில் இருப்பதாக திருச்சி மாவட்ட அமைச்சர்கள் முதல்வரிடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்தே டெல்டா மாவட்டங்களில் திடீரென்று முதல்வர் ஆய்வு பணிகளை மேற்கொண்டொருக்கிறார்.
இந்த ஆய்வுக்காக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு ஆகியோரை உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் துறை சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை முதல்வர் அழைத்து செல்லவில்லை. தனது துறை தொடர்பான ஆய்வின்போது முதல்வர் தன்னை அழைத்துச் செல்லாததால் தன்னை தவிர்த்து விட்டதால் தவிப்பில் இருந்திருக்கிறார் துரைமுருகன். கடைசிவரைக்கும் அவரிடமிருந்து அழைப்பு வராததால் கடும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்.
தன் துறை சம்மந்தப்பட்ட நிகழ்விற்கு தன்னை அழைத்துச் செல்லாத வருத்தம் ஒருபக்கம் இருந்தாலும், வேறு துறை அமைச்சர்களை அழைத்து சென்றதால் தான் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம் துரைமுருகன்.