எதிரணியுடன் சகவாசம்! ‘மாஜி’யை தூக்கி எறிந்த காங்கிரஸ்
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கேவி தாமஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இடது ஜனநாயக முன்னணி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ததால் கட்சி தலைமை இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது.
கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் திரிக்காகரா தொகுதிக்கு 31ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் உமா என்கிற வேட்பாளரை காங்கிரஸ் களமிறக்கி இருக்கிறது. ஆளும் இடது ஜனநாயக முன்னணியின் சார்பில் ஜோ. ஜோசப் என்பவர் களமிறங்கி இருக்கிறார்.
எதிரணியின் ஜோசப்பினை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக கேவி தாமஸ் அறிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இருக்க, எதிர் தரப்பினரை ஆதரித்து அவருக்கு பிரச்சாரம் மேற்கொள்ளாக இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சொன்னது கேரளா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் காங்கிரசிலிருந்து விலகப் போகிறீர்களா என்று கேள்வி எழுந்த போது, நான் காங்கிரஸிலிருந்து விலக மாட்டேன் என்று தெரிவித்திருந்தார் கே. வி. தாமஸ்.
தாமஸின் இந்த நிலைப்பாட்டிற்கு கட்சி தலைமை எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதையும் மீறி நேற்று முன்தினம் ஜோசப்பை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார். மேலும், பொதுக்கூட்ட மேடையில் முதல்வர் பினராயி விஜயனுடன் அவர் அமர்ந்திருந்தார். மேடையிலும் அவர் பேசினார்.
அப்போது இடது ஜனநாயக முன்னணி அரசை புகழ்ந்து தள்ளினார். இதனால் கட்சியிலிருந்து கே. வி. தாமஸை நீக்கி காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதற்கு கே. வி. தாமஸ், என்னை கட்சியிலிருந்து நீக்குவதாக வெளியாகி இருக்கும் அறிவிப்பு வெறும் நகைச்சுவை தான் என்று சொல்லி சமாளித்திருக்கிறார்.