ஊழல் முனைகள் அவிழ்க்கப்படுவதால் அரவிந்த் கெஜ்ரிவாலை கைவிலங்குகள் நெருங்கி வருகின்றன... கவுரவ் பாட்டியா

 
கடந்த 5 வருஷத்துல அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு ரூ.1.3 கோடிதான் கூடியிருக்கு……

மதுபான கொள்கை ஊழல் வழக்கு விவகாரத்தை குறிப்பிட்டு, ஊழல் முனைகள் அவிழ்க்கப்படுவதால் அரவிந்த் கெஜ்ரிவாலை கைவிலங்குகள் நெருங்கி வருகின்றன என்று பா.ஜ.க.வின் கவுரவ் பாட்டியா தெரிவித்தார்.

டெல்லியின் மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஐ.ஏ.எஸ். அதிகாரி, மூத்த அதிகாரிகளுக்கு சொந்தமான 31 இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் ஆம் ஆத்மி கட்சியோ, 2024ல் பிரதமர் மோடிக்கு சவாலாக இருப்பார் என்று கருதி கெஜ்ரிவாலை குறிவைத்து பா.ஜ.க. இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்று குற்றம் சாட்டியது. ஆம் ஆத்மி கட்சியின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

கவுரவ் பாட்டியா

டெல்லியில் பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா செய்தியாளர்களை சந்தித்து  பேசினார். அப்போது கவுரவ் பாட்டியா கூறியதாவது: ஊழல் முனைகள் அவிழ்க்கப்படுவதால் அரவிந்த் கெஜ்ரிவாலை கைவிலங்குகள் நெருங்கி வருகின்றன. கோவிட் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டிய நேரம் வந்தபோது, கெஜ்ரிவால் கலால் கொள்கையில் கையெழுத்திட்டு ஊழலில் ஈடுபடுவதில் மும்முரமாக இருந்தார். 2024ல் (மக்களவை  தேர்தல்) மோடிக்கு எதிராக கெஜ்ரிவால் என்று ஆம் ஆத்மி கட்சி கூறுகிறது. 

ஆம் ஆத்மி

ஆனால் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கோவாவில் என்ன நடந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். கலால் கொள்கை ஊழலின் வேர்கள் கெஜ்ரிவாலின் வீட்டு வாசலுக்கு இட்டு செல்கின்றன. யாரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை, ஊழல்வாதிகள் யாரும் காப்பாற்றப்பட மாட்டார்கள். ஐ.எஸ்.ஐ. முத்திரை உத்தரவாதத்தை விட ஆம் ஆத்மியின் ஊழல் பெரிய உத்தரவாதம். இரண்டு மாநிலங்களில் ஆம் ஆத்மி அரசுகள், இரண்டு சுகாதார அமைச்சர்கள், இருவரும் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ளனர். இன்று இந்திய மக்கள் சொல்கிறார்கள், இது ஆம் ஆத்மி அல்ல, ஒரு பாவம், இது ஊழலின் தந்தை, மக்களுக்கு சாபம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.