திமுகவுக்கு தாவுகிறாரா காயத்ரி? சபரீசன் சந்திப்பு குறித்து அமர்பிரசாத் சொன்னது உண்மைதானா?
திமுகவுக்கு தாவ பார்க்கிறார் காயத்ரி ரகுராம். அதனால் அவரை பொறுப்பிலிருந்து அண்ணாமலை நீக்கியது சரிதான் என்று அக்கட்சியினர் சொல்லி வந்தனர். முதல்வர் மருமகன் சபரீசன் உடன் ஒரு மணி நேரம் சந்தித்து ஆலோசனையும் நடத்தி இருக்கிறார் என்றும் குற்றம் சாட்டி வந்தனர். இதை மறுத்து வந்தார் காயத்ரி. ஆனாலும் தற்போது திமுக அரசுக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் காயத்ரி. இதன் மூலம் அவர் திமுகவுக்கு தாவ இருக்கிறாரா? சபரீசன் சந்திப்பு குறித்து பாஜகவினர் சொன்னது உண்மைதானா என்று பரபரப்பு எழுந்திருக்கிறது.
பாஜகவில் முதலில் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார் காயத்ரி ரகுராம். அந்த பிரிவில் தனக்கு கீழே இருந்த நிர்வாகிகளை தலைவரின் முடிவு இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டு நீக்கியதால் அந்த பிரிவின் தலைவர் பொறுப்பிலிருந்து காயத்ரியை தூக்கி அடித்தார் அண்ணாமலை. இதை அடுத்து வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. அந்த பொறுப்பில் இருந்தும் தற்போது காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டிருக்கிறார்.
சூர்யா சிவா- டெய்ஸி சரண் ஆடியோ விவகாரத்தில் தலைமை குறித்து கடுமையாக விமர்சித்ததாலும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் குறிப்பாக அண்ணாமலை உட்பட பலர் போடும் பதிவுகளுக்கு அதிக லைக்குகள் கொடுப்பதற்கென்று ஒரு குரூப் இருப்பதாகவும் காசு கொடுத்து லைக்குகள் வாங்குகிறார்கள் என்றும் சொல்லி கட்சிக்குள் பெரும் சலசலப்பு ஏற்படுத்தி இருந்தார் காயத்ரி ரகுராம். சிலரைப் போல் ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் போலியான லைக்குகள் போலியான பாலோவயர்கள் வைத்து என்னை பெரிய ஆளாக காட்டிக் கொள்ள விரும்பவில்லை என்று அண்ணாமலையை மறைமுகமாக சாடியிருந்தார்.
இதனால் காயத்ரி ரகுராம் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். காயத்ரி ரகுராமின் நீக்கத்திற்கு வேறு பல காரணங்களும் சொல்லப்பட்டன. முதல்வர் மு. க. ஸ்டாலின் மருமகன் சபரீசனை ஹோட்டலில் சந்தித்து ஒரு மணி நேரம் அவருடன் பேசிக் கொண்டிருப்பதாக சொன்னார் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி.
’’மூன்று மாதங்களுக்கு முன்பு சோமர் செட் ஓட்டலில் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்து ஒரு மணி நேரம் பேசி இருக்கிறார் காயத்ரி ரகுராம். போலிகளுக்கு பாஜகவில் இடம் இல்லை. தலைவர் அண்ணாமலை சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்திருக்கிறார்’’ என்றார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள காயத்ரி ரகுராம், ’’முட்டாளே அது என் நண்பரின் பிறந்தநாள். அவர் என்னையும் சில பேசன் நண்பர்களையும் அழைத்து இருந்தார் . சபரீசன் உள்ளிட்ட பலரையும் அழைத்து இருக்கின்றார். அது ஒரு எதிர்பாராத சம்பவம். ஹாய் மற்றும் ஹலோ சொல்வது என் டீசென்சி. முகத்தை திருப்பிக் கொண்டு போக நான் முதிர்ச்சியற்றவள் அல்ல. பிரதமர் மோடி கூட அரசு விவகாரங்களில் ஸ்டாலினை சந்திக்கிறார்’’ என்று கூறியிருந்தார்.
ஆனால், தான் வகித்து வந்த பொறுப்பை இசையமைப்பாளர் தினாவுக்கு கொடுத்துவிட்டதால், அண்ணாமலை மீது ஆத்திரம் கொண்டு, திமுகவை பாராட்ட ஆரம்பித்திருக்கிறார்.
’’கரோனா வந்தவுடன் பணயம் வைத்து பணிபுரிந்த அரசு ஊழியர்களை பாராட்டி, அவர்களுக்கு மாலை அணிவித்தோம். ஆனால் இப்போது மாண்டோஸ் புயலுக்கு நான் அரசு ஊழியர்களை பாராட்ட வேண்டாமா? வார் ரூம் பாய்ஸ் என்ன அநியாயம்? நான் என்ன செய்தாலும் என்னைக் ட்ரோல் செய்ய ஆசையா? அறிவுறுத்தல்களுமா? எந்த அரசாங்கமாக இருந்தாலும் துப்புரவு பணியாளர்கள் அவர்களின் கடினமான பணிக்காக பாராட்டப்பட வேண்டும்.’’என்று பதிவிட்டுருக்கிறார் காயத்ரி ரகுராம்.