அக்னிபாத் திட்டத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மறைமுக திட்டம்.. எச்.டி. குமாரசாமி பகீர் தகவல்

 
ஆர்.எஸ்.எஸ்.

ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு திட்டமான அக்னிபாத் திட்டத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்  மறைமுக திட்டம் உள்ளது என எச்.டி. குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசு அண்மையில் ராணுவம், கடற்படை, விமானப்படையில் இளைஞர்கள் சேர ஏதுவாக அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயது வரையிலான இருபாலரும், 4 ஆண்டுகள் வரை முப்படைகளில்  பணிபுரியலாம். அதன்பிறகு சேவா நிதி எனப்படும் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு, அவர்கள்: பணியில்  இருந்து விடுவிக்கப்படுவர். மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்  மறைமுக திட்டம் உள்ளது என எச்.டி. குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அக்னிபாத் திட்டம்

கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்ப்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான எச்.டி. குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அக்னிவீரர்களை தேர்ந்தெடுப்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பா அல்லது இந்திய ராணுவமா? 10 லட்சம் அக்னிவீரர்களை தேர்ந்தெடுப்பது யார்? தேர்ந்தெடுக்கப்பட்ட 10 லட்சத்தில் ஆர்.எஸ்.எஸ். குழு இருக்கும். 2.5 லட்சம் பேர் அக்னிபாத்தில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், பின்னர் அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்களாக இருப்பார்கள். 

எச்.டி.குமாரசாமி

இது ஆர்.எஸ்.எஸ். மறைமுக திட்டம். 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே அனுப்பப்படும் மீதமுள்ள 75 சதவீதம் பேர் நாடு முழுவதும் பரவுவார்கள்.இந்தியாவில் ஒய்வு பெற்ற 75 சதவீத அக்னி வீரர்களை ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்தும். இது நாஜிகளை போல் இருக்கும். அவர்கள் (ஆர்.எஸ்.எஸ்.) இந்தியாவில் நாஜி இயக்கத்தை கொண்டு வர முயற்சிக்கிறார்கள், எனவே அவர்கள் அக்னிபாத் திட்டத்தை முன்வைத்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.