வதந்திகளை பரப்பியதற்காக அகிலேஷ் யாதவை சிறையில் அடைக்க வேண்டும்.. பா.ஜ.க.

 
அகிலேஷ் யாதவ்

இ.வி.எம். குறித்து வதந்திகளை பரப்பியதற்காக அகிலேஷ் யாதவை சிறையில் அடைக்க வேண்டும் என பா.ஜ.க. எம்.பி. ஹர்நாத் சிங் யாதவ் வலியுறுத்தினார்.

சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கடந்த செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களிடம்  பேசுகையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பா.ஜ.க. வெற்றி பெறும் என்ற கருத்தை உருவாக்க விரும்புகின்றன. இது ஜனநாயகத்திற்கான கடைசி போராட்டம். வேட்பாளர்களுக்கு தெரிவிக்காமல் இ.வி.எம். (மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்) கொண்டு செல்லப்படுகிறது. இந்த வழியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்ட செல்லப்பட்டால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது திருட்டு. நாங்கள் எங்கள் வாக்குகளை காப்பாற்ற வேண்டும், அதற்கு எதிராக நாம் நீதிமன்றத்துக்கு செல்லலாம், ஆனால் அதற்கு முன், ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார். அகிலேஷ் யாதவின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

ஹர்நாத் சிங் யாதவ்

பா.ஜ.க. எம்.பி. ஹர்நாத் சிங் யாதவ் கூறியதாவது: இந்திய தண்டனை சட்டத்தின்படி (ஐ.பி.சி.), வதந்திகளை பரப்புதல், பொதுமக்களை தவறாக வழிநடத்துதல், தவறான தகவல்களை வழங்குதல், கடுமையான குற்றங்களின் பிரிவின் கீழ் வரும். அகிலேஷ் யாதவ் கண்மூடித்தனமாக இதுபோன்ற குற்றங்களை செய்கிறார். வதந்திகளை பரப்பியதற்காக அகிலேஷ் யாதவ் மீது வழக்கு பதிவு செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கிறேன்.

சமாஜ்வாடி

அவரை (அகிலேஷ் யாதவ்) கம்பிக்கு பின்னால் நிறுத்த வேண்டும். உத்தர பிரதேசத்தில் தனது 5 ஆண்டு கால ஆட்சியின் போது அவர் ஜனநாயக மதிப்புகள், இலட்சியங்கள், ஜனநாயக கொள்கைகள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்ததால், அவரது வாயிலிருந்து ஜனநாயகத்தை பற்றி கேட்பது விசித்திரமாக இருக்கிறது. மாநிலம் முழுவதும் நரகமாக்கப்பட்டது. மாபியா மற்றும் குண்டர்களின் பிடியில் மாநிலம் சிக்கியது. சமாஜ்வாடி ஆட்சிக் காலத்தில் மாநில அரசின் நிதி கொள்ளையடிக்கப்பட்டது, விதிமுறைகள் மீறப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.