ஓவைசி நாட்டை உடைக்கும் செயலை நிறுத்தவில்லை என்றால், சிறையில்தான் அவர் காலம் கழியும்.. பா.ஜ.க. எம்.பி.
அசாதுதீன் ஓவைசி நாட்டை உடைக்கும் செயலை நிறுத்தவில்லை என்றால், சிறையில் தான் அவர் காலத்தை கழிக்க வேண்டும் என பா.ஜ.க. எம்.பி. ஹர்நாத் சிங் யாதவ் எச்சரிக்கை செய்தார்.
பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி. ஹர்நாத் சிங் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுதந்திரத்திற்கு முன் ஜின்னா செய்த நாட்டை அழிக்கும் அதே வேலையை இப்போது அசாதுதீன் ஓவைசி நன்கு திட்டமிட்டு செய்து வருகிறார். அவரது இந்த அணுகுமுறையை இந்திய மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள், இது போன்ற தவறான செயல்களை அனுமதிக்க மாட்டார்கள். அசாதுதீன் ஓவைசி முஸ்லிம் சமூகத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார். அசாதுதீன் ஓவைசி நாட்டை உடைக்கும் செயலை நிறுத்தவில்லை என்றால், சிறையில் தான் அவர் காலத்தை கழிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று அசாதுதீன் ஓவைசி செய்தியாளர்களிடம் பேசுகையில் பெட்ரோல் விலை உயர்வு,வேலையின்மை போன்றவற்றுக்கு முகலாயர்கள்தான் காரணம் என்று கூறி பா.ஜ.க.வை கிண்டல் அடித்து கடுமையாக தாக்கினார். அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: பெட்ரோல் விலை உயர்வுக்கு முகலாயர்களே காரணம் என்று நான் நம்புகிறேன். அதற்கு அவுரங்கசீப் பொறுப்பு. பணவீக்கத்துக்கு அக்பரும்,வேலையின்மைக்கு ஷாஜஹானும் பொறுப்பு. இதைத்தான் நான் நம்புகிறேன். இந்த பொறுப்புகள் அனைத்தும் முகலாயர்கள் மீது விழுகின்றன. எதற்கும் பிரதமர் பொறுப்பல்ல.
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மதராசா குறித்த கருத்தை குறிப்பிட்டு, முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் மீதான பா.ஜ.க.வின் வெறுப்பு வெளிப்படையாக இருக்கிறது. இது ஒரு தாழ்வு மனப்பான்மை, அதை மறைக்க இப்படி முட்டாள்தனமாக பேசுகிறார். ராஜா ராம் மோகன் ராய் ஷாக்கா அல்லது மதராசாவில் படித்தாரா? இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் என்னவென்றால், நாம் மனித நேயம், அமைதி மற்றும் அன்பை கற்பிக்கிறோம். இதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. விஞ்ஞானம், கணிதம் போன்றவையும் அங்கு கற்பிக்கப்படுகின்றன. மேலும் இந்தியாவை இன்னும் அழகாக மாற்றியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.