நாடு ஒற்றுமையாக இருப்பதால் ராகுல் காந்தி இந்தியா ஒற்றுமை யாத்திரையை பாகிஸ்தானில் நடத்த வேண்டும்.. அசாம் முதல்வர்
நாடு ஒற்றுமையாக இருப்பதால் ராகுல் காந்தி இந்த (இந்தியா ஒற்றுமை) யாத்திரையை பாகிஸ்தானில் நடத்த வேண்டும் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
2024ல் மக்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் இப்போதே தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸின் இந்தியா ஒற்றுமை பயணம் பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற நடைபயணத்தை தொடங்குகிறார். இந்திய ஒற்றுமை பயணத்தினபடி, ராகுல் காந்தி மொத்தம் 3,500 கி.மீ. தொலைவை 5 மாதங்களில் நிறைவு செய்கிறார். இந்த நடைபயணத்தின்போது பல்வேறு மாநில மக்களிடம் ராகுல் காந்தி கலந்து உரையாடுவார் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கிரஸின் இந்தியா ஒற்றுமை பயணம் குறித்து அந்த கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், நாடு பிளவுபடுவதால் இந்தியா ஒற்றுமை அவசியம். பிரிவுக்கான முதல் காரணம் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், இரண்டாவது சமூக துருவமுனைப்பு மற்றும் மூன்றாவது அரசியல் மையமயமாக்கல் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. எனவே இப்போது நாட்டை ஒற்றுமைப்படுத்துவது முக்கியம் என தெரிவித்தார்.
காங்கிரஸின் இந்தியா ஒற்றுமை பயணத்தை அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா விமர்சனம் செய்துள்ளார். ஹிமந்தா பிஸ்வா சர்மா டிவிட்டரில், 1947ல் காங்கிரஸின் கீழ் இந்தியா பிளவுப்பட்டது, தற்போது இந்தியா ஒற்றுமை யாத்திரைக்காக காங்கிரஸ் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும். இந்தியா ஒற்றுமையாக இருப்பதால் ராகுல் காந்தி இந்த யாத்திரையை பாகிஸ்தானில் நடத்த வேண்டும் என பதிவு செய்துள்ளார்.