2024ல் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக கெஜ்ரிவால் இருந்தால் பா.ஜ.க.வுக்கு நல்லது.. அசாம் முதல்வர்

 
அரவிந்த் கெஜ்ரிவால்

2024ல் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக கெஜ்ரிவால் இருந்தால் பா.ஜ.க.வுக்கு நல்லது என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

டெல்லியின் மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் போில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். நேற்று காலையில்தான் சோதனை முடிவடைந்தது. சி.பி.ஐ. சோதனை நிறைவடைந்ததையடுத்து மணிஷ் சிசோடியா செய்தியாளர்களிடம்  பேசுகையில்,  நான் இன்னும் சில தினங்களில் கைது செய்யப்படலாம். பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கெஜ்ரிவாலை பற்றி கவலைப்படுகிறது. ஏனென்றால் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு முதன்மையான சவாலாக அரவிந்த் கெஜ்ரிவாலை அவர்கள் பார்க்கிறார்கள். வரும் 2024 தேர்தல் மோடியா, கெஜ்ரிவாலா என்று தான் இருக்கும் என் தெரிவித்தார்.

ஹிமந்தா பிஸ்வா சர்மா

மணிஷ் சிசோடியாவின் கருத்துக்கு அசாம் முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: 2024 மக்களவை தேர்தலில் நரேந்திர மோடியை எதிர்கொள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் பா.ஜ.க. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். ஏனென்றால் பல மாநிலங்களில் உள்ள மக்களுக்கு அவரை (அரவிந்த் கெஜ்ரிவால்) தெரியாது.

பா.ஜ.க.

ஒரு மாதிரி (சுகாதாரம்) இருந்தால், மக்கள் அசாமுக்கு வந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மருததுவக் கல்லூரியை நாங்கள் எப்படி மேம்படுத்துகிறோம் என்பதை பார்க்க வேண்டும். டெல்லியின் மொஹல்லா கிளினிக்குகள் ஒரு மாதிரியாக (மாடல்) இருக்க முடியாது. மொஹல்லா கிளினிக்குகள் முன்மாதிரியாக மாறினால், நமது சுகாதார வசதியை பார்க்க யாரும் இந்தியாவுக்கு வர மாட்டார்கள்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.