ஜெயக்குமாரை திக்கு முக்காடச்செய்யும் வீட்டுச்சாப்பாடு
இரவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜெயக்குமார் தற்போது நிபந்தனை ஜாமீனில் தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதற்காக திருச்சியில் தங்கி இருக்கிறார். அவருக்காக கட்சியின் நிர்வாகிகள் தங்கள் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து வருகிறார்கள். ஒரு ஆள் எத்தனை சாப்பாட்டை தான் சாப்பிட முடியும் . அதனால் நிர்வாகிகள் பலரும் எடுத்து வரும் சாப்பாட்டை தான் சாப்பிட்டது போக, தன்னைப்பார்க்க வரும் தொண்டர்களிடம் சாப்பிடக் கொடுத்து விடுகிறார் ஜெயக்குமார்.
அடுத்தடுத்து மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் பூந்தமல்லி சிறை மற்றும் புழல் மத்திய சிறையில் 20 நாட்களுக்கும் மேலாக சிறைவாசத்துக்கு பிறகு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். இரண்டு வாரங்களுக்கு திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதால் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருக்கிறார் ஜெயக்குமார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி சென்றிருக்கிறார் ஜெயக்குமார். அப்போது முதல் இப்போது வரை அதிமுகவினர் அந்த தனியார் ஓட்டலை முற்றுகையிட்டுள்ளனர். தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் அதிமுக பிரமுகர்களுடன் தான் செலவிட்டு வருகிறார் ஜெயக்குமார்.
திருச்சி மற்றும் தஞ்சாவூர் , நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்தும், வட மாவட்டங்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் அவரை பார்க்க படையெடுத்து வருகிறார்கள். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் நேற்று முன்தினம் ஜெயக்குமாரை சந்தித்துள்ளார். ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக இருவரும் பேசியிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், மாதவரம் மூர்த்தி நேற்று வந்து சந்தித்துள்ளனர்.
திருச்சி மாவட்ட நிர்வாகிகள் பலரும் காலையிலும் மாலையிலும் வீட்டில் சமைத்த உணவுகளை ஜெயகுமாருக்காக கொண்டு வருகிறார்கள். நிறைய நிர்வாகிகள் வீட்டு சாப்பாடு கொண்டு வருவதால், சாப்பாட்டை தன்னை பார்க்க வரும் தொண்டர்கள் இடம் கொடுத்து வருகிறாராம் ஜெயக்குமார். இத்தனை பேர் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு வருவதால் திக்குமுக்காடிப் போயிருக்கிறார் ஜெயக்குமார்.
திருச்சியில் தங்கியிருக்கும் நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிர்வாகி வீட்டுக்கு சென்று சாப்பிட்டால் என்ன என்று யோசிக்கிறாராம். அதையும் இன்று முதல் செயல்படுத்த தொடங்கி விட்டாராம். முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான பரஞ்சோதி அழைப்பின்பேரில் மதிய உணவு சாப்பிடுவதற்காக மன்னச்சநல்லூர் தொகுதிக்கு சென்றிருக்கிறார் ஜெயக்குமார்.