திமுக அரசு.. மு.க.அழகிரி சொன்னதை கேட்டு ஷாக் ஆன நிருபர்கள்
சட்டமன்றத் தேர்தலின் போது தாசில்தாரை தாக்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உள்பட 20 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்கள். விசாரணைக்கு பின்னர் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வெள்ளரிக்காரர் கோயிலுக்குள் கிராம தலைவர்கள் பொதுமக்களிடம் முக அழகிரி ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது கோயில் கதவுகள் அடைக்கப்பட்டன. தேர்தலில் ஓட்டு வாங்க அழகிரி பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுகவினர் புகார் தெரிவித்து இருந்தார்கள்.
இதை அடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாரருமான காளிமுத்து, தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேன் உடன் அங்கு சென்று வீடியோ எடுத்துள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அழகிரி. அவரது ஆதரவாளர்கள் தாசில்தாரை அடித்து உதைத்ததாக கீழவளவு காவல்துறையில் புகார் செய்யப்பட்டது.
மு.க. அழகிரி, மதுரை மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்தவர்கள் என 20 பேர் மீது நாலு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது . இது குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நீதிபதி லீலா பானு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க. அழகிரி மன்னன் நிர்வாகிகள் ஆஜர் ஆனார்கள்.
விசாரணைக்கு பின்னர் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அழகிரி இடம், திமுக அரசின் செயல்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு திமுக அரசு குறித்து பதில் எதுவும் சொல்லாமல், நீதிமன்றத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என்று தெரிவித்தார். திமுக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று கேட்ட கேள்விக்கு நீதிமன்றத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது என்று பதில் அளிக்கிறாரே என்று செய்தியாளர்கள் திகைத்து நின்றனர்.