ஜெயலலிதா போட்டோ இருந்ததை பார்த்து சுதாரித்துக்கொண்டேன் -உதயநிதி ஸ்டாலின்
நானும் எடப்பாடி பழனிச்சாமி காரில் ஏறப் போனேன் . அப்புறம் ஜெயலலிதா போட்டோ இருப்பதை பார்த்து சுதாரித்துக் கொண்டேன் என்று சொல்லி சிரித்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் காரும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் காரும் ஒரே மாதிரியாக உள்ளதால் இருவரும் கார் மாற்றி ஏற முற்பட்ட குழப்பங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
இரண்டு காருமே சட்டப்பேரவை நுழைவு வாயில் எண் 4 பகுதியில் நிறுத்தப்படுவது வழக்கம். அப்படி இருக்கும்போது கடந்த வாரம் எடப்பாடி பழனிச்சாமி தவறுதலாக தன் கார் என்று நினைத்து தவறுதலாக உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முற்பட்டிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்து வெளியேறும்போது உதயநிதி ஸ்டாலினுடன், அமைச்சர் அன்பில் மகேஷ், அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் ஆகியோர் பேசிக் கொண்டே வந்திருக்கிறார்கள். அப்போது எடப்பாடி பழனிச்சாமி உதயநிதி ஸ்டாலின் காரில் தவறுதலாக ஏற முற்பட்டது குறித்து உதயநிதியிடம் பேசி சிரித்துக் கொண்டே வந்திருக்கிறார்கள் .
அதற்கு உதயநிதி ஸ்டாலின், நானும் மூன்று நாட்களுக்கு முன்னதாக தவறுதலாக என் கார் என்று நினைத்து எடப்பாடி பழனிச்சாமி காரில் ஏறப்பார்த்தேன். அப்புறமாக முகப்பில் ஜெயலலிதா போட்டோ இருப்பதை பார்த்து சுதாரித்துக் கொண்டேன் என்று சொல்லி விட்டு சிரித்து இருக்கிறார்.