திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் தமிழை எப்போதே அழித்திருப்பார்கள் -அமைச்சர் பொன்முடி பேச்சு
திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் தமிழை எப்போதே அழித்திருப்பார்கள் என்று பேசினார் அமைச்சர் பொன்முடி.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கான பட்டமளிப்பு விழா விழுப்புரத்தில் இன்று நடந்தது. இதில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி.
விழாவில் அவர் பேசிய போது, பொறியியல் படிப்பவர்கள் கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும் என்பதால் வரும் ஆண்டிலிருந்து முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கட்டாயம் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எந்த துறையில் பயின்றாலும் அந்த துறையில் நான் முதல்வனாக வரவேண்டும் என்கிற எண்ணம் வளர வேண்டும் என்பதற்காகத்தான் நான் முதல்வன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, கடந்த 2019 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருக்கும் போது பொறியியல் படிப்பில் சிவில் படிப்பு தமிழ் வழியில் கொண்டுவரப்பட்டது. எங்களுக்கு ஆங்கிலமும் தமிழும் இரு மொழிக் கொள்கை. வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்ய வேண்டும் என்றால் ஆங்கிலம் முக்கியமாக தேவை இருக்கிறது. அதற்காக ஆங்கிலத்தை மட்டும் கற்றுக் கொண்டால் போதும் என்று நினைக்காமல் தமிழையும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
திராவிட மாடல் ஆட்சி மட்டும் இல்லை என்றால் தமிழை எப்போதே அழித்திருப்பார்கள். இந்தியை புகுத்தி படிக்கச் சொன்னால் எப்படி முடியும்? பன்னாட்டு மொழியான ஆங்கிலம் இருக்கும் போது இந்தி எதற்காக? என்ற கேள்வியை எழுப்பினார். அவர் மேலும், நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல. இந்தி கட்டாய பாடம் என்றால் மட்டுமே அதனை ஏற்க மாட்டோம். மற்றபடி இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று விருப்பப்படுபவர்கள் தாராளமாக கற்றுக் கொள்ளலாம் என்றார்.