பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணைகிறாரா? சோனியாவுடன் 4 மணி நேரம் ஆலோசனை
விரைவில் வரவிருக்கும் குஜராத் சட்டமன்ற தேர்தல் , 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து பிரசாந்த் கிஷோருடன் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி கட்சியின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். இதையடுத்து பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைகிறாரா அல்லது தேர்தல் வியூகம் வகுக்க பணியாற்றுகிறாரா என்ற கேள்வி எழுந்து இருப்பதை அடுத்து ஒரு வாரத்தில் இதற்கு விடை கிடைக்கும் என்கிறார் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால்.
உத்தரப் பிரதேசம் , உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்த பின்னர் வரப்போகும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு தனது கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று நினைத்திருக்கிறார் சோனியாகாந்தி. இதை அடுத்து தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை டெல்லி ஜன்பத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி.
இந்த சந்திப்பில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே , காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் , காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அஜய் மக்கான், திக்விஜய்சிங், ஜெய்ராம் ரமேஷ், அம்பிகா சோனி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
4 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிரசாந்த் கிஷோர், நாடாளுமன்றத் தேர்தலில் வலுவாக இருக்கக்கூடிய பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரசும் அதனுடைய கூட்டணி கட்சிகளின் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விரிவாகப் பேசியிருக்கிறார்.
2024 நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்லாது குஜராத்தில் விரைவில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும் பிரசாந்த் கிஷோர் இடம் சோனியா காந்தி ஆலோசித்திருக்கிறார். இந்த சந்திப்புக்குப் பின்னர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலிடம், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைகிறாரா? அல்லது கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுக்க பணியாற்றுகிறாரா? என்ற கேள்விக்கு, ‘’இன்னும் ஒரு வாரத்தில் இதற்கு விடை கிடைத்து விடும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.