எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம்.. எச்.டி. குமாரசாமி அறிவிப்பு

 
க்ளார்க் போல் என்னை நடத்தியது காங்கிரஸ் – குமாரசாமி

2023ம் ஆண்டில் நடைபெற கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று  மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி. குமாரசாமி தெரிவித்தார்.

கர்நாடகாவில் தற்போது முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. 2023ம் ஆண்டில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடப்பதற்கு இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில், எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்ப்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான எச்.டி.குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. 

மதசார்ப்பற்ற ஜனதா தளம்

எங்களுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் சுயேட்சைகள் எங்களுக்கு உதவுவார்கள். மதசார்ப்பற்ற ஜனதா தளத்துக்கு நல்ல சூழ்நிலை உள்ளது. இன்னும் தேர்தலுக்கு 6  மாதங்கள் உள்ளது.  மேலும் 123 இடங்களையாவது வெல்லும் இலக்கை அடைய மக்களின் நம்பிக்கையை பெற முயற்சிப்போம். மாநிலத்தில் உள்ள ஏதேனும் ஒரு பிராந்திய கட்சி அல்லது அமைப்புகள் எங்களுடன் கலந்துரையாடிய பிறகு நான்கைந்து தொகுதிகளில் போட்டியிட விரும்பினால், அவர்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்துவது குறித்து பரிசீலிப்போம். 

தேர்தல் ஆணையம்

மொத்தமுள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளில் குறைந்தபட்சம் 123 இடங்களை வென்று மாநிலத்தில் மதசார்ப்பற்ற ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும். நவம்பர் 1ம்  தேதி, நான் பஞ்சரத்ன ரதயாத்திரையை தொடங்கும்போது, 123-126 இடங்களுக்கான வேட்பாளர்களின் முதல் பட்டியலை அறிவிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.