பிரசாந்த் கிஷோர் அரசியலில் புதியவர் என்பதால் அற்பத்தனமான அறிக்கைகளை வெளியிடுகிறார்... ஐக்கிய ஜனதா தளம்

 
பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர் அரசியலில் புதியவர் என்பதால் அற்பத்தனமான அறிக்கைகளை வெளியிடுகிறார் என்று ஐக்கிய ஜனதா தளம் பதிலடி கொடுத்துள்ளது.

பிரபல தேர்தல் வியுக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தீவிர அரசியல் ஈடுபட முடிவு செய்துள்ளார். இதற்காக அக்டோபர் 2ம் தேதியன்று பீகாரில்  ஜன் சுரஜ் பாதயாத்திரையை தொடங்கினார். பீகார் முழுவதுமாக   3,500 கிலோ மீட்டர் பாதயாத்திரையாக 38 மாவட்டங்களுக்கும் சென்று அங்குள்ள ஒவ்வொரு பஞ்சாயத்துகளுக்கும்  சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள ஜோகப்பட்டி கிராமத்துக்கு  சென்றார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

ஜோகப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பேசுகையில், பெட்டியா நகரம் இங்கிருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு செல்வதற்கான இந்த அழுக்கான மோசமான பாதை ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு கொடுங் கனவாக உள்ளது. இங்கு ஏன் சாலை அமைக்கப்படவில்லை என்று விசாரித்த போது, 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு யாரோ ஒருவர் முதல்வர் (நிதிஷ் குமார்) மீது ஷுவை வீசியதால் சாலை அமைக்கப்படவில்லை என்று என்னிடம் கூறினார்கள். குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் முழு பகுதியும் தண்டிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க.

பிரசாந்த் கிஷோரின் குற்றச்சாட்டுக்கு ஐக்கிய ஜனதா தளம் பதிலடி கொடுத்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளர் அபாக் அகமது கூறியதாவது: இதுவரை நிதிஷ் குமார் முதல்வராக இருந்த காலத்தில், பெரும்பான்மையான ஆண்டுகள் சாலை கட்டுமானத் துறை பா.ஜ.க. வசம் தான் இருந்தது. பா.ஜ.க.வுக்கு எதிராக பேசுவதில் பிரசாந்த் கிஷோர் ஏன் இவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறார். பிரசாந்த் கிஷோர் அரசியலில் புதியவர் என்பதால் இது போன்ற அற்பத்தனமான அறிக்கைகளை வெளியிடுகிறார். பீகாரை மாற்றியமைத்த பெருமை நிதிஷ் குமாருக்கு உண்டு என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.