பா.ஜ.க.வை தவிர, அனைத்து கட்சிகளும் குடும்பவாதத்தை வளர்ப்பதை அடிப்படையாக கொண்டவை.. ஜே.பி. நட்டா தாக்கு..
பா.ஜ.க.வை தவிர இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் குடும்பவாதத்தை வளர்ப்பதை அடிப்படையாக கொண்டவை என பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குற்றம் சாட்டினார்.
இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு இமாச்சல பிரதேசம் சொந்த மாநிலம் என்பதால், அந்த மாநிலத்தில் தங்களது (பா.ஜ.க.) ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதில் அவர் மிகவும் தீவிரமாக உள்ளார். தேர்தலை மனதில் வைத்து இமாச்சல பிரதேசத்துக்கு 4 நாள் பயணமாக ஜே.பி. நட்டா கடந்த சனிக்கிழமையன்று சென்றார். நேற்று முன்தினம் சிம்லாவில் பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் நேற்று பிலாஸ்பூரில் நடைபெற்ற பேரணியில் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். மேலும் பொதுக்கூட்டத்தில் ஜே.பி. நட்டா பேசுகையில் கூறியதாவது: சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களில், யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2வது முறையாக உத்தர பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்றதை நாம் அனைவரும் கண்டோம். பல ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக எந்த முதல்வரும் ஆட்சிக்கு வராததால் இது ஒரு வரலாற்று முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. அதேபோல் உத்தரகாண்டிலும் பா.ஜ.க. தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிக்கு வந்தது, கோவாவில் ஹாட்ரிக் சாதனை படைத்தோம். மணிப்பூரில் பா.ஜ.க. முதல் முறையாக வரலாற்று சிறப்புமிக்க வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை பிடித்தது.
தற்போது இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க.வை தவிர, இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் குடும்பவாதத்தை வளர்த்து, வெறும் பிராந்தியக் கட்சிகளுக்குள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்வதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். மேலும் ஆம் ஆத்மி கட்சியும் இந்த பிராந்திய கட்சிகளின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறது. இந்திய தேசிய காங்கிரஸில் இந்தியா இல்லை, தேசியமும் இல்லை, காங்கிரஸ் கூட இல்லை. அது வெறும் சகோதரன்-சகோதரி கட்சிதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.