ஜெயலலிதா, சசிகலா அறைகளில் சோதனை - புகைப்படங்களால் பதிவு செய்த சிபிசிஐடி

 
sa

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி  போலீசார் கொடநாடு எஸ்டேட்டில் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.  ஜெயலலிதா,  சசிகலா தங்கி இருந்த அறைகளில் ஆய்வு செய்த சிபிசிஐடி போலீசார்  அந்த பகுதிகளை புகைப்படங்களால் பதிவு செய்துள்ளனர்.  காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்ட பகுதியையும் ஆய்வு செய்து  புகைப்படங்களால் பதிவு செய்துள்ளனர்.   மூன்று மணி நேரம் நடந்த இந்த ஆய்வு மற்றும் விசாரணைக்கு பின்னர் நாளை மீண்டும் விசாரணை தொடரும் என்று தெரிய வருகிறது.

k

 நீலகிரி மாவட்டத்தில் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 24.4.2017 அன்று கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.  இந்த சம்பவங்கள் தொடர்பாக கோத்தகிரி போலீசார் சயான்,  வாளையார் மனோஜ், சதீசன், தீபு, சந்தோஷ் சாமி , பிஜின்,  மனோஜ் சாமி, ஜித்தன் ஜாய் ,  உதயகுமார்,  சதீஷ்,  ஜம்சீர் அலி ஆகியோரை கைது செய்தனர்.  

 இந்த கொலை ,கொள்ளை சம்பவம் குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது .  திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு மறுவிசாரணை நடத்தப்பட்டு வந்தது.  கொடநாடு எஸ்டேட்டின் மேலாளர் நடராஜன்,  சசிகலா,  விவேக் , கொடநாடு எஸ்டேட் கணினி பிரிவில் பணிபுரிந்து தற்கொலை செய்த தினேஷின் தந்தை போஜன்  உட்பட 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது.   இந்த வாக்குமூலங்கள் அனைத்தும் அறிக்கையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.   ஆனாலும் இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதால் இந்த கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.

 இதன் பின்னர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் கிருஷ்ண மூர்த்தி தலைமையிலான தனிப்படையினர் 1500 பக்கங்கள் கொண்ட விசாரணை ஆவணங்களை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முருகனிடம் தாக்கல் செய்தனர்.  அதேபோல் மற்றொரு நகல் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டது.  

o
 
இதையடுத்து சிபிசிஐடி டிஜிபி முகமது ஷகில் அக்தர் தலைமையிலான குழுவினர், கொடநாடு எஸ்டேட்டில் இன்று ஆய்வு, விசாரணை மேற்கொண்டனர்.  கொலையாளிகள் திட்டமிட்டு பங்களாவில் நுழைந்த நுழைவாயில் , பங்களாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்ட இடம் உள்பட பங்களாவின் பல  பகுதிகளில் சிபிசிஐடி போலீசார் நேரில் ஆய்வு செய்தனர். 

 இன்றைக்கு 3 மணி நேரத்திற்கு மேல் கொடநாடு எஸ்டேட்  பங்களாவில் சிபிசிஐடி அதிகாரிகள்  ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி உள்ளனர் . குறிப்பாக முக்கிய ஆவணங்கள்எடுத்துச் செல்லப்பட்டதாக சொல்லப்படும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கி இருந்த அறை,  சசிகலாவின் அறை,  காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்ட இடம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு புகைப்படங்களால் பதிவு செய்து கொண்டனர்.  

 சிபிசிஐடி அதிகாரிகளின்  விசாரணை நாளையும் தொடரும் என்று தெரிய தெரிகிறது .

இந்த நிலையில்,  நாளை மறுநாள் கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணை  உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வரவிருக்கிறது.