மகாராஷ்டிராவில் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை.. ஜெயந்த் பாட்டீல்
மகாராஷ்டிராவில் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் சிவ சேனா அமைச்சரும், அந்த கட்சியின் மூத்த தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான கிளர்ச்சியில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஈடுபட்டுள்ளார். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தயார் உத்தவ் தாக்கரே தயார் என்றால் சிவ சேனா பிளவு ஏற்படாது என்றும், தனக்கு ஆதரவாக 40க்கும் மேற்பட்ட சிவ சேனா எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என எச்சரிக்கை விடுத்து இருந்தார். ஆனால் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க உத்தவ் தாக்கரே தயார் இல்லை என தெரிகிறது.
இதனால் ஏக்நாத் ஷிண்டே கட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் இறங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசாங்கம் கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தவ் தாக்கரே அரசாங்கம் கவிழ்ந்தால் எதிர்க்கட்சி வரிசையில் அமருவோம என தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா அமைச்சருமான ஜெயந்த் பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசாங்கம் நீடித்தால் நாங்கள் ஆட்சியில் இருப்போம், அரசு கவிழ்ந்தால் எதிர்க்கட்சியில் அமருவோம். தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என தெரிவித்தார்.