ராகுல் காந்தியை போல நான் எனது தொகுதியை விட்டு ஓடவில்லை... தெலங்கானா முதல்வர் மகள் கவிதா பதிலடி..
ராகுல் காந்தியை போல நான் எனது தொகுதியை விட்டு ஓடவில்லை என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூருக்கு தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினர் கவிதா பதிலடி கொடுத்துள்ளார்.
தெலங்கானாவின் நெல் கொள்முதல் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டிவிட்டரில், தெலங்கானா விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதில் மத்திய பா.ஜ.க. அரசும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி அரசும் தங்களது தார்மீக பொறுப்பை புறக்கணித்து அரசியல் செய்வது வெட்கக்கேடானது என்று பதிவு செய்து இருந்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கல்வகுந்த்லா கவிதா பதிலடி கொடுத்துள்ளார்.
கல்வகுந்த்லா கவிதா டிவிட்டரில் பதிவு செய்து இருப்பதாவது: ராகுல் காந்தி நீங்கள் ஒரு எம்.பி., அரசியல் ஆதாயத்திற்காக டிவிட்டரில் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறீர்கள். கொள்முதல் கொள்கைக்கு எதிராக டி.ஆர்.எஸ். எம்.பி.க்கள் தினமும் நாடாளுமன்றத்திற்குள் சென்று போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகியவை மாறுபட்ட கொள்கைகளை கொண்டுள்ளன. மற்ற மாநிலங்கள் நெல் கொள்முதலை பொறுத்தவரை வெவ்வேறு கொள்முதல் கொள்கையை கொண்டுள்ளன. நீங்கள் நேர்மையாக இருந்தால், நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டு, தெலங்கானா எம்.பி.க்களுக்கு ஆதரவாகவும், ஒரே நாடு மற்றும் ஒரே கொள்முதல் கொள்கைக்காகவும் போராடுங்கள். இவ்வாறு அதில் தெரிவித்து இருந்தார். கவிதாவின் டிவிட்டுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்தார்.
மாணிக்கம் தாகூர் டிவிட்டரில், கவிதா காரு, முன்னாள் எம்.பி.க்களை நாடாளுமன்றத்துக்குள் அனுமதிப்பதில்லை ஆகையால் நீங்கள் உள்ளே வர முடியாது. அதை பயன்படுத்தி டி.ஆர்.எஸ். எம்.பி.க்கள் சென்ட்ரல் ஹாலில் தோக்லா, பிரியாணியை ருசிக்கிறார்கள், மக்களவை மையத்தில் அல்ல. 2021 ஆகஸ்டில் எப்.சி.ஐ.-க்கு புழுங்கல் அரிசி வழங்கக் கூடாது என்று ஒப்பந்தத்தில் கையெழுததிட்டு, தெலங்கானா விவசாயிகளின் கழுத்தை நெரித்தது யார்? என்று பதிவு செய்து இருந்தார். இதற்கு கவிதா டிவிட்டரில், இந்த ஆணவம் உங்கள் கட்சியை நாடாளுமன்றத்தில் இரட்டை இலக்கமாக மாற்றி விட்டது. வெற்றியோ, தோல்வியோ உங்கள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை போல நான் எனது தொகுதியை விட்டு ஓடவில்லை. மேலும் நான் 2 தொகுதியில் போட்டியிடவில்லை. டி.ஆர்.எஸ். ஒரே நாடு, ஒரே கொள்முதல் கொள்கையை கோருகிறது. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியின் நிலைப்பாடு என்ன? டி.ஆர்.எஸ். கட்சி எப்போதும் விவசாயிகளுடன் இருக்கும். ஒவ்வொரு கிராம் தெலங்கானா நெல் கொள்முதல் செய்யப்படும் வரை ஓயப்போவதில்லை என்று பதிவு செய்துள்ளார்.