பயத்தால்தான் கனிமொழிக்கு பதவி கொடுத்துள்ளார்கள்; திமுக போல தொடை நடுங்கி கிடையாது நாங்க.. டிடிவி தினகரன் விளாசல்
அனைத்து துறைகளிலும் முறைகேடு, சாக்கடிக்கும் மின் கட்டண உயர்வு , தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் மக்கள் விரோத போக்கு ஆகியவற்றை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார்.
அவர் பேசிய போது தமிழையும் தமிழக மக்களையும் ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள். தற்போது புதிதாக மதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். அனைத்து மதத்தையும் ஒன்றாக பார்க்கும் மக்கள் வாழுகின்ற நாடுதான் தமிழ்நாடு. மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் மக்கள் வாக்களிக்கவில்லை . நல்லாட்சி வேண்டும் என்று தான் வாக்களிக்கிறார்கள்.
ராஜாஜி, காமராசர், அண்ணா, எம்ஜிஆர் , ஜெயலலிதா ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக மக்களை எஜமானவர்களாக நினைத்து நடந்த ஆட்சி. எம்ஜிஆர் தயவால் ஆட்சிக்கு வந்தவர் கருணாநிதி துரோகம் செய்து கட்சியை விட்டு நீக்கினார். எம்ஜிஆர் மறைவுப் பிறகு தொண்டர்கள் குழப்பத்தில் இருந்ததால் தான் திமுக ஆட்சி அமைந்தது. நாங்கள் திருந்தவே இல்லை என்கிற விதமாக திமுக ஆட்சி தற்போது நடக்கிறது .
நிதிநிலை மோசமாக இருந்த போதும் மக்களை ஏமாற்ற பொய்யான வாக்குறுதியை கொடுத்தார்கள் திமுகவினர் என்றார் தினகரன்.
தொடர்ந்து திமுக அமைச்சர்களின் போக்கினை கடுமையாக விமர்சித்தார். முதல்வர் ஸ்டாலினும் பொதுக்குழுவில் தூக்கம் வராமல் தவிப்பதாக கூறுகிறார். ஜெயலலிதா இருந்தால் அமைச்சர்களுக்கு தூக்கம் வருமா? பொழுது விடிந்தால் அமைச்சர் பதவி இருக்குமா என தெரியாது. தவறு செய்தால் அமைச்சர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பார். தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை போல கண்டிப்பாகவும் இருந்தார் ஜெயலலிதா என்றார்.
மேலும், செந்தில் பாலாஜியால் தான் இன்றைக்கு திமுகவில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. துரைமுருகன் படித்தவர் 80 வயதை கடந்த ஆனால் அவரது பேச்சு ஜமீன்தார் போல இருக்கிறது. பொதுவெளியில் ஒரு மருத்துவரிடம் எப்படி நடந்து கொள்கிறார்.. கன்னியாகுமரிக்கு தூக்கி அடிப்பேன் என்கிறார். அமைச்சர் பொன்முடியோ தெலுங்கு பட வில்லன் போல பேசுகிறார் . இவர் போகும் காரு வீடு எல்லாமே ஓசிதான். ஆனால் அகங்காரம் ஆணவத்தால் எஜமானவர்களாகிய மக்களை ஓசி எனச் சொல்கிறார்.
பல கட்சி மாறும் ராஜ கண்ணப்பன் அதிகாரியை சாதியைச் சொல்லி இருக்கிறார். கனிமொழிக்கு திமுகவில் துணைபொதுச்செயலாளர் பதவி. திமுகவில் வேறு யாருமே இல்லையா திமுக வாரிசு அரசியலால் மடம் போல இருக்கிறது. பயத்தால்தான் கனிமொழிக்கு பதவியை கொடுத்திருக்கிறார்கள். திமுக போல ஒரு தொடை நடுங்கி கிடையாது நாங்கள் என்று விளாசி எடுத்தார்.