பிரதமர் மோடி இந்தியாவை வலிமையாக்கியுள்ளார் அதனால் அவரை நேருவுடன் ஒப்பிட முடியாது... பொம்மை பதிலடி

 
மோடி, நேரு

பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் நேருவுடன் ஒப்பிட முடியாது என்ற சித்தராமையாவின் கருத்துக்கு, பிரதமர் மோடி இந்தியாவை வலிமையாக்கியுள்ளார் அதனால் அவரை நேருவுடன் ஒப்பிட முடியாது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலடி கொடுத்தார்.

கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா கடந்த சில தினங்களுக்கு முன் பேசுகையில், ஆர்.எஸ்.எஸ். என்பது இந்தியர்களின் அமைப்பு அல்ல, இந்த ஆர்.எஸ்.எஸ். பூர்வீக இந்தியர்களா? சில விஷயங்களை கிளற விரும்பாமல் அமைதியாக இருந்தோம். இந்த நாட்டை சேர்ந்தவர்கள் ஆரியர்களா? (ஆர்.எஸ்.எஸ்.) திராவிடர்களா? அடிப்படைக்கு செல்ல வேண்டும். பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் நேருவுடன் ஒப்பிட முடியாது என தெரிவித்து இருந்தார்.

சித்தராமையா

சித்தராமையாவின் கருத்துக்கு கர்நாடக முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பசவராஜ் பொம்மை பதிலடி கொடுத்துள்ளார். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: தான் திராவிடரா அல்லது ஆரியரா என்பதை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா முதலில் அறிவிக்கட்டும். ஆமாம் அது (மோடியை நேருவுடன் ஒப்பிட முடியாது) உண்மை. ஏனெனில் இந்தியாவை சீனா தாக்கியபோது எந்த ஒரு கடுமையான நடவடிக்கையும் நேரு எடுக்கத் தவறியதால், நாடு தனது நிலப்பரப்பில் ஒரு பகுதியை சீனாவிடம் இழந்தது.

பசவராஜ் பொம்மை

ஆனால் சீனா இந்திய எல்லைகளை அத்துமீற முயன்றபோது பிரதமர் மோடி வலுவாக நின்று கடுமையாக நடந்து கொண்டார். பாகிஸ்தானுடன் அவர் சமரசம் செய்து கொள்ளவில்லை. அவர் இந்திய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்துள்ளார். பிரதமர் மோடி இந்தியாவை வலிமையாக்கியுள்ளார். அவரை நேருவுடன் ஒப்பிட முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.