ஒரு மாநிலத்தை மற்றொரு மாநிலத்துடன் ஒப்பிடுவது சரியல்ல என்று நான் நம்புகிறேன்... பினராயி விஜயன்

 
தந்தை பெரியார் பிறந்தநாள்; தமிழில் பினராயி விஜயன் வெளியிட்ட பதிவு!

ஒரு மாநிலத்தை மற்றொரு மாநிலத்துடன் ஒப்பிடுவது சரியல்ல என்று நான் நம்புகிறேன் என கேரளா குறித்த உ.பி. முதல்வரின் கருத்து குறித்து பினராயி விஜயன் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் முதல் கட்ட தேர்தலுக்கு முன்னதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் டிவிட்டரில் அவர் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், என் இதயத்தில் உள்ள ஒன்றை உங்களிடம் சொல்ல வேண்டும். இந்த ஐந்தாண்டுகளில் நிறைய அற்புதங்கள் நடந்துள்ளன. ஜாக்கிரதை! தவறினால் இந்த ஐந்து ஆண்டு உழைப்பு கெட்டு விடும். காஷ்மீர், கேரளா மற்றும் மேற்கு வங்கமாக உத்தரபிரதேசம் மாற அதிக நேரம் எடுக்காது என்று பேசியிருந்தார்.

யோகி

யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உடனடியாக பதிலடி கொடுத்தார். பினராயி விஜயன் டிவிட்டரில், யோகி ஆதித்யநாத் பயப்படுவதுபோல் உத்தர பிரதேசம் கேரளாவாக மாறினால், அது (உத்தர பிரதேசம்) சிறந்த கல்வி, சுகாதார சேவைகள், சமூக நலன், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அனுபவிப்பதோடு, மதம் மற்றும் ஜாதியின் பெயரால் மக்கள் கொல்லப்படாத ஒரு நல்லிணக்கத்தை கொண்டிருக்கும். அதைத்தான் உத்தர பிரதேச மக்கள் விரும்புவார்கள் என்று பதிவு செய்து இருந்தார்.

கேரள சட்டப்பேரவை

இந்நிலையில் நேற்று கேரள சட்டப்பேரவையில் பினராயி விஜயன் கூறியதாவது: இது உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அரசியல் உள்நோக்கம் கொண்ட அறிக்கை. ஒரு மாநிலத்தை மற்றொரு மாநிலத்துடன் ஒப்பிடுவது சரியல்ல என்று நான் நம்புகிறேன். அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்கள் கேரளாவையும், உத்தர பிரதேசத்தையும் ஒப்பிட முடியாது என்று கூறியுள்ளனர். ஒட்டு மொத்த சுகாதார செயல்திறனில் கேரளாவுக்கு நிதி ஆயோக் முதலிடம் கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.