அகிலேஷ் யாதவ் தனது தந்தையை கட்சி தலைவர் பதவியில் இருந்து தள்ளிவிட்டு அதில் அமர்ந்தவர்.. கேசவ் பிரசாத் மவுரியா
அகிலேஷ் யாதவ் தனது தந்தையை கட்சி தலைவர் பதவியில் இருந்து தள்ளிவிட்டு அதில் அவர் அமர்ந்தவர் என்று பா.ஜ.க.வின் கேசவ் பிரசாத் மவுரியா குற்றம் சாட்டினார்.
உத்தர பிரதேசம் மாநிலம் மெயின்புரி மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்த சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் கடந்த அக்டோபர் 10ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து அந்த தொகுதிக்கு டிசம்பர் 5ம் தேதியன்று இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக மறைந்த முலாயம் சிங் யாதவின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார்.
முலாயம் சிங் யாதவின் நினைவை போற்றும் வகையில், மெயின்புரி மக்களவை தொகுதியில் டிம்பிள் யாதவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என்று சமாஜ்வாடி கட்சியின் கூட்டணி கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன. ஆனால் அதனை பா.ஜ.க. மறுத்து விட்டது. மேலும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்தது. அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக ரகுராஜ் சிங் ஷக்யா போட்டியிடுகிறார். இந்நிலையில், அகிலேஷ் யாதவ் தனது தந்தையை கட்சி தலைவர் பதவியில் இருந்து தள்ளிவிட்டு அதில் அவர் அமர்ந்தார் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் துணை முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கேசவ் பிரசாத் மவுரியா செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறுகையில், அகிலேஷ் யாதவ் தனது தந்தை முலாய் சிங் யாதவைப் போல் ஆக இன்னும் 10 வாழ்க்கைகள் தேவைப்படும். அகிலேஷ் யாதவ் தனது தந்தையை கட்சி தலைவர் பதவியில் இருந்து தள்ளிவிட்டு அதில் அவர் அமர்ந்தார் என தெரிவித்தார்.