ராசாவின் எம்பி பதவியை பறிக்க ஜனாதிபதியிடம் முறையிடும் காடேஸ்வரா
ஆ. ராசாவின் எம்பி பதவியை பறிக்க ஜனாதிபதியிடம் முறையிடுவோம் என்று அறிவித்துள்ளார் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் . இது குறித்து அவர் மேலும், நீலகிரி எம்பி ராசா தொடர்ந்து இந்து மத நம்பிக்கைகளையும் இந்துக்களையும் கொச்சைப் படுத்தி வருகின்றார்.
சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த விழாவில் இந்துக்கள் குறித்து இழிவாக பேசியுள்ளார் எம். பி. ராசா. அவர் பதவியேற்கும் போது எந்த மதத்தையும் இழிவுபடுத்த மாட்டேன் யாருக்கும் பாரபட்சமாக நடக்க மாட்டேன் என்று தான் காப்பு பிரமாணம் செய்து செய்தார். ஆனால் இந்து மதத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல், அம்பேத்கர் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்க மாட்டேன் என்கிறார் ராசா. கட்சியின் அரசியல் லாபத்திற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறி மக்களிடையே பிரிவினை விழிப்புணர்வினை தொடர்ந்து பேசி வரும் ராசா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்கிறார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவில் 90% இந்துக்கள் இருப்பதாகச் சொன்னார். ஆனால் ஆட்சி அமைத்த பின்னர் திமுக அரசு எந்த மதத்தையும் சார்ந்து ஆட்சி புரியாது யாரையும் புண்படுத்தாது என்று சொன்னார் . அப்படிப்பட்டவர் ஆ. ராசாவின் பேச்சை ஏற்கிறாரா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் காப்பு பிரமாணத்தையும் காற்றில் பறக்க விட்டு தான் தோன்றித்தனமாக செயல்படுகின்ற எம்பி ராசாவின் பதவியை பறிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் முறையிட இருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். இப்போது சொல்லுங்கள் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? இந்த கேள்வியை உரக்கச் சொன்னால்தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடி நாதமாக அமையும் என்று சென்னையில் நடந்த விழாவில் ஆ.ராசா பேசியதற்குத்தான் இந்த எதிர்ப்பு எந்திருக்கிறது.