குஜராத்தில் மதுவிலக்கை நீக்கினால் பா.ஜ.க. 182 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.. குமன்சிங் வன்சியா
குஜராத்தில் மதுவிலக்கை நீக்கினால் பா.ஜ.க. மொத்தமுள்ள 182 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அந்த கட்சியில் மீண்டும் இணைந்த குமன்சிங் வன்சியா தெரிவித்தார்.
குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் குமன்சிங் வன்சியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.க.விலிருந்து விலகினார். கடந்த 2017ல் நடைபெற்ற அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சை போட்டியிட்டார். இந்நிலையில் குமன்சிங் வன்சியா நேற்று மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார். காந்திநகரில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் சி.ஆர்.பாட்டீல் மற்றும் பலர் குமன்சிங் வன்சியாவை மீண்டும் கட்சிக்கு வரவேற்றனர்.
பா.ஜ.க.வின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குமன்சிங் வன்சியா பேசுகையில் கூறியதாவது: குஜராத்தில் மதுவிலக்கை நீக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அப்படி செய்தால் மொத்தமுள்ள 182 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் நான் கூறியது போல் அது எனது தனிப்பட்ட கருத்து. கட்சியின் எந்த முடிவுக்கும் நான் கட்டுப்படுகிறேன். 1973ல் ஜனசங்கத்தின் குஜராத் மாநில மாநாடு நடந்தபோது நான் 11ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். நான் அப்போது ஜனசங்க துண்டை அணிந்திருந்தேன்.
எமர்ஜென்சி காலத்தில் நானும் சிறையில் இருந்தேன். 1980ல் பாருச் மாவட்ட செயலாளராக இருந்த நான், மாவட்ட பொதுச் செயலாளராகவும், தலைவராகவும் ஆனேன். நான் 1995ல் வக்ரா சட்டப்பேரவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் மோடி சாருடன் ஸ்கூட்டர் மற்றும் பழைய ஜீப்பில் பயணம் செய்தேன். பாட்டீல்ஜியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன். வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் கட்சிக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.