திமுகவில் இணைந்தார் கு.க.செல்வம்! பாஜகவிலிருந்து விலகியது ஏன்? என பேட்டி

 
selvam

2016 - 2021ஆம் ஆண்டுகளில் ஆயிரம்விளக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கு.க செல்வம் கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்   திமுகவில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் நபர்களில் ஒருவராக கருதப்படும் செல்வம் கட்சியை விட்டு வெளியேறியது அப்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. 

selvam

இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் இந்த வருடம் குஷ்பு போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல் நிகழ்ச்சிகளில் ஒதுங்கியிருந்த கு.க செல்வம் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  சந்தித்து அண்ணா அறிவாலயத்தில்  தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

திமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கு.க செல்வம், “பாஜகவில் இருந்து மீண்டும் தாய் கழகத்தில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி. தமிழக எம்.பி.களை மதிக்காத உள் துறை அமைச்சர் கண்டித்தும் டீசல் மற்றும் பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும் கொரோனோவை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும் நான் அங்கு இருந்து வெளியில் வந்துள்ளேன்.

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு குறைவான அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தமிழகம் எதிர்ப்பு குரல் எழுப்பி வரும் நிலையில் பாஜக அதற்கு ஆதரவாக இருக்கிறது. இதன் காரணமாக நான் மீண்டும் தாய் கழகத்தில் இணைந்துள்ளேன்.பாஜகவின் எதிர் காலம் இருண்ட காலமாக இருக்கும். இன்று மதியம் கூட அண்ணாமலை என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
குடும்பத்திலிருந்து தம்பி ஒருவர் வெளியேறி மீண்டும் இணைந்தால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறு இணைத்துள்ளேன்.எனக்கு 63 வயது ஆகிவிட்டது. இனி கழகத்தில் தான் இருப்பேன். இங்குதான் பணியாற்றுவேன். தாய்கழகத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.தாய் வீட்டில் மீண்டும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆயிரம் விளக்கு மற்றும் தி.நகர் பகுதியில் வேலை செய்து வேட்பாளர்களை வெற்றி பெற செய்வேன்” எனக் கூறினார்.