சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு விவகாரம்.. நான் ஒரு தற்காலிக குடியிருப்பாளர், குத்தகைக்குதான் வசிக்கிறேன்.. மம்தா பானர்ஜி
சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு, நான் ஒரு தற்காலிக குடியிருப்பாளர், குத்தகை்குதான் வசிக்கிறேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவியும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வசித்து வரும் குடியிருப்பு, சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்துள்ளது கட்டப்பட்டுள்ளதாக சேனல் ஒன்று குற்றம் சாட்டியிருந்தது. இது மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம் முதல்வர் மம்தா பானர்ஜி தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:
ஒரு சேனல் நான் சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்ததாக குற்றம் சாட்டியுள்ளது. நாங்கள் காளிகாட்டில் ராணி ராஷ்மோனியின் நிலத்தில் வசிக்கிறோம். நாங்கள் அனைவரும் குத்தகைதாரர்கள். இன்று நடைபெற்ற சி.எஸ்.சி. கூட்டத்தில் சட்டவிரோதமாக நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு தொடர்பாக மாநில தலைமை செயலாளரிடம் விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.
நான் சொத்தை ஆக்கிரமித்துள்ளேன் என்பது நிரூபணமானால் அல்லது அதை செய்ய யாருக்காவது உதவியிருந்தால் அதை இடிக்க முடியும். எனது குடும்பத்தினர் யாரேனும் மத்திய நிறுவனங்களிடம் இருந்து நோட்டீஸ் பெற்றால் சட்டரீதியாக போராடுவேன். இன்றைய நாட்களில் (அத்தகைய நோட்டீஸ்களை சட்டரீதியாக எதிர்த்து போராடுவது) கடினமாகி விட்டது. நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.