விடிய விடிய வாதாடி ஓபிஎஸ்க்கு வெற்றியை தேடித்தந்த வழக்கறிஞர்கள்
அவ்வளவுதான் ஓபிஎஸ் அரசியல் சகாப்தம் முடிந்துவிட்டது என்று அதிமுகவினர் எல்லோரும் நினைத்திருந்த வேளையில் தடாலடியாக இரவில் மேல்முறையீடு செய்து விடிய விடிய வாதம் செய்து ஓபிஎஸ்-க்கு வெற்றியை தேடித் தந்திருக்கிறார்கள் வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன், திருமாறன் ராஜலட்சுமி.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பதவி விவகாரத்தால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டு அது உச்சகட்டத்திற்கு சென்றது. இதனால் மாநில நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் என்று கட்சியின் 95 சதவிகிதம் பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதைக் கண்டு கொதித்து எழுந்த ஓபிஎஸ் இன்று நடக்கவிருந்த பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதினார். அதை ஏற்காத எடப்பாடி பழனிச்சாமி, திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும் என்று பதில் அனுப்பியிருந்தார்.
இதை அடுத்து மீண்டும் ஒரு அஸ்திரத்தை எடுத்தார் ஓபிஎஸ். சென்னை வானகரத்தில் நடக்கவிருக்கும் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என்று ஆவடி காவல் ஆணையருக்கு மனு அளித்திருந்தார். ஆனால் ஆவடி காவல் ஆணையரோ, இந்த பொதுக்குழு கூட்டம் தனியார் இடத்தில் நடைபெறுகிறது . அதுவும் அரங்கத்திற்கு உள்ளே நடைபெறுகிறது. அதனால் அதற்கு தடை விதிக்க முடியாது என்று ஓபிஎஸ்-ன் கோரிக்கையை நிராகரித்தார்.
ஓபிஎஸ்க்கு அடிமேல் அடி விழுந்ததால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் உற்சாக முழக்கமிட்டு வந்த நேரத்தில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று மதியம் 3 மணிக்கு மேல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நேற்று இரவில் இரு தரப்பு வாதம் முடிந்தது. அதன் பின்னர் தனி நீதிபடி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கையை நிராகரித்தார்.
இதனால் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் உற்சாக முழக்கமிட்டனர் . தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் தர்மம் வென்றது என்று எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியில் சொன்னார். ஓபிஎஸ் சொன்னதையே அவருக்கு திருப்பி சொல்லி இருந்தார்.
அவ்வளவுதான் ஓபிஎஸ் அரசியல் சகாப்தம் முடிந்துவிட்டது என்று அதிமுகவினர் எல்லோரும் நினைத்திருந்த நிலையில் தடாலடியாக நேற்று இரவே ஓபிஎஸ் தரப்பில் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியின் உத்தரவை எதிர்த்து மே முறையீடு செய்யப்பட்டது. அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் அந்த மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகிய நீதிபதிகள் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர்.
எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ராஜகோபால், விஜயநாராயணன் வழக்கறிஞர்கள் ஆஜர் ஆனார்கள். ஓபிஎஸ் தரப்பில் அரவிந்த் பாண்டியன், திருமாறன் ராஜலட்சுமி ஆகிய வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள்.
பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென்று ஓபிஎஸ் தரப்பும், பொதுக்குழுவை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் விடிய விடிய வாதம் செய்தனர். இந்த வாதம் அதிகாலை 4 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து நீதிபதிகள் 4.20க்கு தீர்ப்பளித்தனர். அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான ஓபிஎஸ் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். அதிமுக பொதுக்கூட்டம் நடத்த எந்த தடையும் இல்லை. அதே நேரம் பொதுக் குழுவில் 23 தீர்மானங்கள் ஆலோசித்து முடிவு எடுக்கலாம். ஆனால் இருபத்தி மூன்று தீர்மானங்களை தவிர வேறு புதிய தீர்மானங்கள் எதுவும் முடிவு எடுக்க கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்தத் தீர்ப்பினால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடித் தீர்த்தனர். விடிய விடிய வாதாடி வெற்றியை தேடித்தந்த வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன் , திருமாறன் ராஜலட்சுமி ஆகியோருக்கு ஓபிஎஸ் தரப்பினர் வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர். போராட்டத்தில் வெற்றி பெற்று விட்டதால் புதுத்தெம்புடன் இன்று சென்னை வானகரத்தில் நடைபெறவிருக்கும் அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார் ஓபிஎஸ்.