"கருகிய இலை.. தோல்விக்கு எடப்பாடி காரணமல்ல.. தாய்க்கழகம் திரும்பும் அதிமுக" - ஐ.பெரியசாமி ஓபன் டாக்!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அதிமுகவின் மானப் பிரச்சினையாக மாறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். பெரும்பாலான இடங்களில் தோல்வியைத் தழுவினாலும், அதிமுக சார்பில் யாரை நிறுத்தினாலும் வெற்றி நிச்சயம் என்ற இடங்களில் கூட பரிதாபமாக அக்கட்சி தோற்றுள்ளது. இதுதான் அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இல்லம் இருக்கும் சேலம் மாநகராட்சியின் 23ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் படுதோல்வி அடைந்தார்.
அதேபோல எடப்பாடியின் சொந்த தொகுதியான எடப்பாடி நகராட்சியையும் திமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸின் சொந்த வார்டிலும் பெரியகுளம் நகராட்சியிலும் அதிமுக தோல்வியைச் சந்தித்துள்ளது. எஸ்பி வேலுமணியின் அசைக்க முடியாத கோட்டை என சொல்லப்பட்ட தொண்டாமுத்தூர் பேரூராட்சியை மொத்தமாகக் கைப்பற்றி கொடிநாட்டியுள்ளது திமுக. கோவை, நாமக்கல், திருப்பூர், சேலம் என அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தை மொத்தமாக திமுக வாரிச் சுருட்டியுள்ளது. திமுகவே எதிர்பார்க்காத வெற்றியாக இது அமைந்துள்ளது.
இதன் எதிரொலியாக பல்வேறு அதிமுகவினர் திமுகவில் வேக வேகமாக இணைந்து வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 30 முதல் 40 சதவீத இடங்களில் அதிமுக டெபாசிட்டை இழந்துள்ளது. இதற்கு அதிமுக தலைமை காரணம் அல்ல. அக்கட்சியின் தொண்டர்கள் கட்சியைக் காலி செய்து விட்டனர். திமுகவில் சேர்ந்து விட்டனர். இதுதான் தோல்விக்கு முக்கியக் காரணம். காலப் போக்கில் திமுகவில் வந்து அதிமுக சங்கமமாகி விடும். 80 சதவீத வாக்குகள் ஸ்டாலினுக்காக விழுந்தவை.அவருடைய பணி தேவை என்று உணர்ந்தே மக்கள் வாக்களித்துள்ளனர்” என்றார்.