"ஆளுநரை திருப்திபடுத்தும் அதிமுக" - அமைச்சர் மா.சு. பரபர குற்றச்சாட்டு!
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் தவிர்த்து அனைத்து கட்சி உறுப்பினர்களின் சம்மத்ததுடன் ஒருமனதாக நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சியும் பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக உறுப்பினர்களும் மசோதா நிறைவேற முழு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் ஆளுநர் நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டார். இச்சூழலில் பிப்ரவரி 3ஆம் தேதி நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பியனுப்பினார். ஏழை மாணவர்களுக்கும் சமூக நீதிக்கும் எதிராக நீட் விலக்கு மசோதா இருப்பதால் திருப்பியனுப்புவதாக விளக்கமும் அளித்தார். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். இதனை பாஜக புறக்கணித்தது. அதில் ஆச்சரியமில்லை. ஆனால் அதிமுகவும் புறக்கணித்தது தான் பெரும் பேசுபொருளானது.
இதற்குப் பின்னர் விளக்கமளித்த ஓபிஎஸ், திமுக அரசு எடுக்கும் அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் அதிமுக துணைநிற்கும் என அந்தர் பல்டி அடித்தார். இதுகுறித்து விமர்சித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், "நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதுதான் எங்களின் முழு நோக்கம். நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக்கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது ஆளுநரை திருப்திபடுத்தும் செயலாகவே பார்க்க முடிகிறது. சமூகநீதி மீது அக்கறை உள்ளவர்களை ஒன்றிணைக்கவே முதல்வர் ஸ்டாலின் சமூக நீதி கூட்டமைப்பை அறிவித்தார். அதனை அதிமுக புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.