“2014ல் இருந்த பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வராவிடில் தீக்குளிப்பேன் என மோடி முன்பு அண்ணாமலை சொல்வாரா?”
72 மணி நேரத்திற்குள் தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்காவிடில் கோட்டையை முற்றுகையிடுவேன் என்று கூறும் அண்ணாமலை, 2014 ல் இருந்த பெட்ரோல் டீசல் விலையை கொண்டு வராவிடில் தீக்குளிப்பேன் என்று மோடி முன்பு சொல்வாரா? என மாணிக்கம் தாகூர் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத் துவக்க விழா விருதுநகர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், “72 மணி நேரத்திற்குள் தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்காவிட்டால் கோட்டை முன் முற்றுகையிடுவோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது குறித்த கேள்விக்கு? 72 மணி நேரத்திற்குள் குறைக்காவிடில் அண்ணாமலை தீக்குளிப்பாரா? முற்றுகை போன்ற டயலாக்கெல்லாம் எதற்கு? இருப்பதோ கட்சியில் 18 பேர். முற்றுகை இட போகிறோம் என்ற சீன் தேவை இல்லை. போராட்டங்களுக்கு பாதுகாப்பு தரும் காவல்துறையினரை விட குறைவான எண்ணிக்கையில் தொண்டர்களை கொண்ட கட்சி பாஜக. ஒரு பாஜக தொண்டருக்கு 8 போலீசார், அண்ணாமலைக்கு 16 போலீசார் பாதுகாப்பு உள்ளது. அவர்களைப் பொறுத்தவரையில் பொருத்தமற்ற முறையில் பேசுகிறார்கள்.
26 லட்சம் கொள்ளை அடித்தது மோடி அரசு, அம்பானி, அதானி போன்றவர்களுக்கு கடனாக கொடுத்தது இவர்களுடைய ஆட்சி. 72 மணிநேரம் கொடுக்கிறேன் முப்பத்தி இரண்டு மணிநேரம் கொடுக்கிறேன் என்பதெல்லாம் பழைய படம். ரீல் கிழிந்து விட்டது. 2014 ல் இருந்த பெட்ரோல் டீசல் விலையை கொண்டு வராவிடில் தீக்குளிப்பேன் என்று மோடி முன்பு சொல்வாரா? அப்படி சொன்னால் சீரியஸாக பதிலளிக்கலாம்.? குஜராத் தேர்தலுக்காகவே பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டது. எதிர்க்கட்சியினர் இன்னும் போராட்டம் நடத்தினால் இன்னும் விலை குறையும்.
எங்களை மன்னிப்பதற்கு காங்கிரஸ்காரர்கள் யார்? என சீமான் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு? சீமான் பாஜகவின் பி டீம் பேரறிவாளன் விடுதலை என்பது பாஜகவால் நடத்தப்படும் மிகப்பெரிய சதியாக நான் பார்க்கிறேன். இந்தச் சதியில் மெயின் ஆக்டர் சீமான். வருகிற 26ஆம் தேதி மோடி வர இருக்கிறார். அதனை டைவர்ட் செய்ததற்காக பேரறிவாளன் விஷயத்தை கையில் எடுத்துள்ளனர். சீமான் உள்ளாட்சி தேர்தலிலே ஆட்டத்திலே இல்லாமல் போய்விட்டார். இலங்கை ராணுவம் பிரபாகரனை கொன்றபோது சீமான் ஏன் உடன் இருக்கவில்லை? எங்கே ஓடி ஒளிந்தார்? சீமானின் பேச்சே பொய்யும் புரட்டும் தான். R.S.S.ன் கைக்கூலியாக செயல்படுகிறார்?
ஒன்றரை இலட்சம் பேரை கொன்றது ராஜபக்சே அரசு. அதற்குரிய பலனை அவர்கள் அனுபவித்து வருகிறார். பிரபாகரனுக்கு ராணுவ உடை கொடுத்து உணவளித்து ஆயுதம் கொடுத்தது இந்திரா காந்தியும் காங்கிரஸ் அரசும் இது சீமானுக்கு தெரியுமா? அவர் யாருக்கு விளக்கு பிடித்துக் கொண்டிருந்தார் என தெரியவில்லை. சினிமாவுக்கு சான்ஸ் கேட்டு கொண்டிருந்திருப்பார்? வரலாறு தெரியாதவர் சீமான்.நெஞ்சை நிமிர்த்தி ஓஹோ ஓஹோ என்று பேசுவதை நம்ப வேண்டிய அவசியமில்லை” எனக் கூறினார்.