அரசாங்கம் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காதது மிகப்பெரிய பிரச்சினை.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

 
ஸ்பீடா போனதற்கு நானே அபராதம் கட்டி இருக்கேன்.. நிதின் கட்கரி தகவல்

அரசாங்கம் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காதது மிகப்பெரிய பிரச்சினை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் சிவில் பொறியாளர்கள் ஆலோசனை சங்கம் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பேசுகையில் கூறியதாவது:  உங்களால் அற்புதங்களை செய்ய முடியும். மேலும் அதற்கான சாத்தியங்களும் உள்ளன. இந்திய உள்கட்டமைப்பின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது என்பது எனது பரிந்துரை. உலகிலும் நாட்டிலும் நல்ல தொழில்நுட்பம், நல்ல கண்டுபிடிப்பு, நல்ல ஆராய்ச்சி மற்றும் வெற்றிகரமான நடைமுறைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

சரியான நேரத்தில் முடிவு

நம்மிடம் மாற்றுப் பொருட்கள் இருக்க வேண்டும், இதன் மூலம் தரத்தில் சமரசம் செய்யாமல் செலவைக் குறைக்க முடியும். கட்டுமானத்தில் மிக முக்கியமான விஷயம் நேரம். நேரம் மிகப்பெரிய மூலதனம். அரசாங்கம் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காதது மிகப்பெரிய பிரச்சினை. தொழில்நுட்பம் மற்றும் வளங்களை விட நேரம் மிகவும் முக்கியமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.  நிதின் கட்கரி பொதுவாக அரசாங்கம் என்று குறிப்பிட்டுள்ளதால், அரசியல் வட்டாரத்தில் பல விதமான பேச்சுகள் எழுந்துள்ளது.

வாஜ்பாய்

ஏனென்றால், அண்மையில் பா.ஜ.க.வின் ஆட்சி மன்ற குழுவிலிருந்து நிதின் கட்கரி நீக்கப்பட்டார். அதன் எதிரொலியாக நேரடியாக மோடி அரசை குறிப்பிடாமல் பொதுவாக அரசாங்கம் என்று நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார் என்று பேசப்படுகிறது. அண்மையில், நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கட்கரி பேசுகையில், பா.ஜ.க. ஆட்சி வந்ததற்கு வாஜ்பாய், எல்.கே. அத்வானி மற்றும் தீன்தயாள் உபாத்யாயா ஆகியோருக்கு பெருமை சேர்க்கலாம் என்று தெரிவித்தார்.