எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால், 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வால் வெற்றி பெறவே முடியாது.. நிதிஷ் குமார்
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால், 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வால் வெற்றி பெறவே முடியாது என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
ஹரியானா மாநிலம் பதேஹாபாத் நகரில் இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் நிறுவனரும், முன்னாள் துணை பிரதமருமான தேவி லாலின் பிறந்தநாளை குறிக்கும் வகையில் நேற்று (செப்டம்பர் 25ம் தேதி) ஒரு கூட்டத்துக்கு அம்மாநில முதல்வரும், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா ஏற்பாடு செய்து இருந்தார். இந்த கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் சி.பி.ஐ. (எம்) சீதாராம் யெச்சூரி உள்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசுகையில் கூறியதாவது: நான் இளமையாக இருந்த அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது, தேவிலால் என்னை வழிநடத்தி ஊக்கப்படுத்தினார். இந்த (எதிர்) கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால், 2024 மக்களவை தேர்தலில் அவர்களால் (பா.ஜ.க.) வெற்றி பெறவே முடியாது. நான் சரத் பவாருடன் நீண்ட நேரம் பேசினேன். அவர்களுடன் சேருமாறு காங்கிரஸிடம் கேட்டுக் கொண்டேன்.
ஓம் பிரகாஷ் சவுதாலாவிடம் ஆசிர்வாதம் பெற விரும்புகிறேன். அவர் மேலும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் நிதிஷ் குமார்,சரத் பவார் மற்றும் மம்தா பானர்ஜி போன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.