பண்ருட்டியாருடன் ஓபிஎஸ் ரகசிய சந்திப்பு -‘பைலா’பற்றி ஆலோசனை

 
ப்

 அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை நேற்று இரவு சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார் பன்னீர்செல்வம்.  கடந்த செயற்குழுவிற்கு முன்னதாக பண்ருட்டி ராமச்சந்திரனை ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தியது போலவே இந்த பொதுக்குழுவுக்கு முன்பாகவும் பண்ருட்டி ராமச்சந்திரனை ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம். 

 அதிமுக பொதுக்குழு வரும் 23 ஆம் தேதி கூடவிருக்கும் நிலையில் அந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானத்தைக் கொண்டுவர எடப்பாடி பழனிச்சாமி முயற்சிகள் எடுத்து வருவதால்,  அதிமுகவின் செயற்குழுவில் எடுத்த தீர்மானத்தின்படி பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை தீர்மானத்தை கொண்டுவர முடியாது.  கட்சி விதியை மீற முடியாது.  அப்படி கொண்டுவந்தாலும் அது சட்டப்படி  செல்லாது என்று ஓபிஎஸ் நினைத்திருந்தாலும், கொண்டுவருவேன் என்கிற தீவிரத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி .

ஒப்

அதிமுக சட்ட விதிகளின்படி அப்படி கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? அப்படிக் கொண்டு வந்தால் என்ன செய்யலாம்? என்பது குறித்து ஆலோசனை நடத்த அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை நேற்றிரவு ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார் பன்னீர்செல்வம் .

கருணாநிதி,  எம்ஜிஆர் அமைச்சரவைகளில் நான்குமுறை மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.  அதன்பின்னர் பாமகவில் இருந்தவர், மக்கள் நல உரிமை கழகம் என்ற தனி அமைப்பை நடத்திவந்தார்.  பின்னர் விஜயகாந்தின் அழைப்பின்பேரில் தேமுதிகவுக்கு சென்று அவைத் தலைவராக இருந்து வந்தார்.  2013ஆம் ஆண்டில் டிசம்பரில் தேமுதிகவில் இருந்து விலகி  2014 ஆம் ஆண்டில் அவர் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் சசிகலாவின் சிறை வாழ்க்கைக்குப் பின்னர் தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார் பண்ருட்டியார்.

 சென்னை அசோக் நகரில் உள்ள இல்லத்தில் பண்ருட்டி ராமச்சந்திரனை  சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் 30 நிமிடங்களுக்கு மேல் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.  அதிமுகவில் சட்டவிதி என்கிற ‘பைலா’தொடர்பாக சந்தேகங்களை கேட்க,   அது குறித்து முழுமையாக விளக்கி இருக்கிறார் பண்ருட்டியார்.