ஓபிஎஸ் அப்படி சொல்லவே இல்லை - பதறும் சையதுகான்
சசிகலா மற்றும் தினகரன் தரப்பினருடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று அதிமுகவினருக்கு ஓபிஎஸ் உத்தரவிட்டார் என பரவும் செய்தியை மறுக்கிறார் சையதுகான். இது குறித்து அவர் செய்தியாளர்களை அழைத்து விளக்கம் அளித்திருக்கிறார்.
அதிமுகவிற்குள் மீண்டும் வர துடிக்கும் சசிகலாவிற்கு உதவிகள் செய்கிறார் ஓபிஎஸ் என்ற குற்றச்சாட்டு ரொம்ப நாளாவே இருந்து வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கூட சசிகலா மற்றும் தினகரன் தரப்பினரிடம் அதிமுகவில் சேர்க்காவிட்டாலும் அவர்களுடன் கூட்டணியாவது வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பியவர் ஓபிஎஸ்.
சசிகலா அதிமுகவிற்குள் வர தீவிரமாக முயற்சி எடுத்து வந்த நிலையில் ஓபிஎஸ்சின் ஆதரவாளரும் தேனி மாவட்ட அதிமுக செயலாளருமான சையது தான் ஓபிஎஸ்சின் பண்ணை வீட்டில் ஆலோசனை கூட்டம் நடத்தி, சசிகலாவை மீண்டும் அதிமுகவிற்குள் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அதை தலைமைக்கும் அனுப்பி அதிமுகவிற்குள் பெரும் பரபரப்பையும் சலசலப்பை ஏற்படுத்தினார்.
இதன் பின்னர் அதிமுக ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என்று இரண்டாக பிரிந்து நிற்கும் நிலையில் ஓபிஎஸ்- சசிகலா- தினகரன் 3 பேரும் இணைய இருக்கிறார்கள் என்றும், இவர்கள் மூன்று பேரும் இணைய வேண்டும் என்று தேவர் சமுதாய அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன என்றும் தகவல் பரவியது.
இந்த நிலையில் அண்மையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி மாவட்டம் சென்றிருந்தார். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளரும் தேனி மாவட்ட செயலாளருமான சையதுகான் தினகரனை வரவேற்று அவருடன் சில நிமிடங்கள் தனியாக சந்தித்து பேசி பரபரப்பு ஏற்படுத்தினார்.
அன்றைய தினமே சென்னையில் இருந்து ஓபிஎஸ் சொந்த ஊரான பெரிய குளம் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்தவர் நேற்று அதிமுக முன்னாள் அவை தலைவர் மறைந்த மதுசூதனனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் நிர்வாகிகளிடம் பேசிய போது, சசிகலா ஆதரவாளர்கள், டிடிவி தினகரன் கட்சியினர் ஆகியோருடன் அதிமுகவினர் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார் என வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
இது குறித்து விளக்கம் அளிக்க சையதுகான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ’’ ஓபிஎஸ் அப்படி சொல்லவே இல்லை’’ என்று மறுத்தார். மேலும், ’’அவர் எந்த ஒரு உத்தரவும் இடவில்லை. இது தவறான செய்தி. இப்படிப்பட்ட தவறான செய்தி பரப்புவதை தவிர்க்க வேண்டும் . உத்தரவு என்ற வார்த்தையை ஒபிஎஸ் அவர்கள் பயன்படுத்தவே இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.