பிரதமர் மோடி, அமித்ஷா வருகை: மதுரை செல்லும் ஓபிஎஸ்
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரும் இன்று தமிழகம் வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் 36 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் தமிழகம் வருகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு 11 மணிக்கு சென்னை வருகிறார். இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
திண்டுக்கல் வரும் பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட இருக்கின்றன. மாநில தலைவர் அண்ணாமலை இதற்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். இதற்காக அவர் திண்டுக்கல், மதுரையில் முகாமிட்டு அந்த வேலைகளை கவனித்து வருகிறார்.
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் இருந்து விமானத்தில் புறப்பட்டு மதியம் இரண்டு மணிக்கு மதுரை வருகிறார் பிரதமர் மோடி. பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக காந்திகிராமம் செல்கிறார் . இதற்காக காந்திகிராமம் பல்கலைக்கழக வளாகத்தில் ஹெலிபேடு அமைக்கப்பட்டிருக்கிறது. 3.30 மணி அளவில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
மதுரை விமான நிலையத்திலேயே பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, பாஜக நிர்வாகிகள் வரவேற்கிறார்கள். முன்னாள் முதல்வர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரும் பிரதமரை வரவேற்க செல்ல திட்டமிட்டு உள்ளார்கள். பிரதமர் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக இன்று காலையில் சென்னையில் இருந்து பன்னீர்செல்வம் மதுரை செல்ல உள்ளார் என்று அவர் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.