பரந்தூர் விமான நிலையம்: பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்ட மக்கள் பேரணி..
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மக்கள் பேரணியில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய போதிய இடவசதி இல்லை. இதனால் 2வது சர்வதேச விமான நிலையம் அமைக்க செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 4 இடங்கள் பரிந்துரை செய்யப்பட்டது. அதில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த பரந்தூரில் ஏகனாம்புரம் கிராமத்தை மையமாக வைத்து சர்வதேச விமான நிலைய அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, 13 கிராமங்களில் 5000 ஏக்கர் விளை நிலங்களை கைப்பற்ற முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், ஏகனாபுரம், அக்கமாபுரம், மேளேரி, வளத்தூர், தண்டலம், நாகப்பட்டு, நெல்வாய், மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் குடியிருப்பு, நீர்நிலைகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கருதும் மக்கள் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று 146வது நாளாக போராட்டம் தொடர்து வரும் நிலையில், 13 கிராம மக்களும் ஏகனாபுரத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முடிவு செய்தனர். இதனால் பாதுகாப்பு கருதி, 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் பேரணியை கைவிடக்கோரி காஞ்சிபுரம் எஸ்பி, டிஎஸ்பி, கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது நாளை காலை 9 மணிக்கு அமைச்சர்களிடம் இதுகுறித்து பேச வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதாகவும், நேரடியாக அமைச்சரிடமே பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளலாம் என்றும் கூறி உறுதியளித்துள்ளனர். இதனையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.