தமிழகத்தில் பாஜக வளர்வது ஆபத்தானது என்ற பொன்னையன் கருத்து உண்மைதான்- பொன்.ராதா
தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி ஆபத்தானது தான் என்று பொன்னையன் சொன்ன கருத்து உண்மைதான் என்று நாகர்கோவிலில் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி ஆபத்தானது என்று அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னையன் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் சொன்னது உண்மைதான். ஒரு கட்சி வளர்வது இன்னொரு கட்சிக்கு ஆபத்தானது தான். இது எல்லா கட்சிக்கும் உள்ளதுதான் எல்லாக் கட்சியினரும் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஒவ்வொரு கட்சியும் அந்த கட்சி வளர வேண்டும் என்று நினைப்பார்கள்.
சசிகலா பா.ஜ.க. வுக்கு வரவேண்டும் என்று தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றாக யோசித்துதான் கூறியிருக்கிறார். பெட்ரோல் டீசல் விலையை உயர்த்த வேண்டும் என்று யாருக்கும் விருப்பமில்லை ஆனால் சில கால சூழ்நிலைகள் காரணமாக நாம் சில விஷயங்களை செய்ய வேண்டிய நிலை உள்ளது” எனக் கூறினார்.