“ஒற்றைத் தலைமையை கைப்பற்ற 2 பேர் அல்ல 4 பேர் போட்டி” பகீர் கிளப்பும் அதிமுக நிர்வாகி
கிலோ கணக்கில் தங்கமும், கோடி கணக்கில் பணத்தையும் பெற்று கொண்டு சசிகலாவுக்கு ஆதரவு கொடுத்த புதுச்சேரி கிழக்கு பகுதி செயலாளர் அன்பழகன், ஓபிஎஸ்ஸிடம் இருந்து ஏழு முறை லட்ச கணக்கில் பணம் கையூட்டு பெற்றதாக மேற்கு பகுதி செயலாளர் ஓம் சக்தி சேகர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மேற்கு பிரிவு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர், அன்பழகன் செய்த ஊழல் முறைகேடுகளை அடுக்கடுக்காக பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய ஓம்சக்தி சேகர், அன்பழகனின் சொத்து ஏலத்திற்கு வந்த பிறகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, திமுக மாஜி எம்பி ஜெகத்ரட்சகன் உட்பட தமிழக அமைச்சர்களிடம் தலா 5 லட்ச ரூபாய் என 1 1/2 கோடி ரூபாய் வசூல் செய்ததாக புகார் தெரிவித்தார். தன்னை காப்பாற்றிக் கொள்ள ஓபிஎஸ்ஸிடம் 7 முறை லட்ச கணக்கில் பணத்தை கையூட்டாக பெற்றுக் கொண்டு அவரது பேனரை கிழித்தது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்மானம் இயற்ற பொதுக்குழுவை கூட்டுவதற்காக பெறப்பட்ட பணம் எங்கே ? எனவும் இந்த பணத்தை யாருக்காவது பிரித்து கொடுத்தீர்களா எனவும் வினவினார். தமிழகத்தில் ஒற்றை தலைமை வரும்போது புதுச்சேரியில் அன்பழகன் கட்சியில் இருக்க மாட்டார் என சவால் விட்ட ஓம் சக்தி சேகர் கட்சியின் சின்னமும் கொடியும் எங்கு இருக்கிறதோ அங்கே தான் நான் இருப்பேன் எனக்கூறினார்.
அதிமுக ஒற்றை தலைமையை கைப்பற்ற நான்கு பேர் கடுமையாக போட்டி போடுவதாகவும், கட்டாயப்படுத்தி யாரையும் வெளியேற்ற தேவையில்லை அவர்களாகவே ஒருவர் விட்டுக் கொடுத்து ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் எனவும் ஓம் சக்தி சேகர் தமது விருப்பத்தை தெரிவித்தார்.