நாங்கள் மண்குதிரைகள் தான்! தோலை உரிச்சிடுவேன் - நாராயணசாமி ஆவேசம்

 
Narayanasamy

நாங்கள் மண்குதிரைகள் தான், விடுதலைபுலியை பார்த்தவன். காங்கிரஸிலிருந்து கட்சி மாறிய அமைச்சர் லட்சுமி நாராயணனின் தோலை உரிப்பேன் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்தார். 

6 பேர் விடுதலையில் மத்திய அரசு தீவிர எதிர்ப்பைக் காட்ட தவறிவிட்டது:  நாராயணசாமி | narayanasamy on Rajiv Gandhi's killers' release - hindutamil.in

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்தி தமிழை அழிக்கும் வேலையை ஆளுநர் தமிழிசை செய்கிறார். ஹிந்திதான் திணிக்கப்படும். இது புதிய கல்விக்கொள்கையை நுழைக்கும் வேலை.  தமிழ் என பேசி மக்களை ஆளுநர் ஏமாற்றுகிறார். இதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். மதசார்பற்ற அணிகள் ஒருங்கிணைந்து போராடுவோம்.  ஆளுநர் தமிழிசைக்கும் முதல்வர் ரங்கசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. அரசு நிர்வாகத்தில் கோப்புகளில் காலதாமதம், ஆளுநர் தலையீடு உள்ளிட்டவற்றை குறிப்பிட்டே முதல்வர் ரங்கசாமி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

முதல்வர் அனுப்பிய வழக்கறிஞர் நியமன கோப்பில் ஆளுநர் மாற்றி முடிவெடுத்துள்ளது மட்டுமில்லாமல் உண்மைக்கு மாறாக பொய்களை பேசிவருகிறார். புதுச்சேரி சூப்பர் முதல்வராக ஆளுநர் தமிழிசை செயல்படுவதை, உறுதி செய்யும் வகையிலேயே முதல்வர் ரங்கசாமி கருத்து புலம்பலாக உள்ளது. டம்மி முதல்வராக உள்ள ரங்கசாமி ஆளுநரையோ, மத்திய அரசையோ எதிர்க்கும் தெம்பு அவரிடம் இல்லை. மாநில அந்தஸ்து அளித்தால் புதுச்சேரி பிராந்தியங்களான மாஹே, ஏனாம் ஆகியவற்றை கைவிட வேண்டும் என்று உள்துறை நிபந்தனையால் நாங்கள் அதை முன்பு ஏற்கவில்லை. அதனால்தான் மாநில அந்தஸ்து தடைப்பட்டது. முதல்வராக காங்கிரஸ் ஆட்சியில் ரங்கசாமி பல முறை இருந்தபோதும் மாநில அந்தஸ்தை கோரவில்லை. மத்திய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் மாநிலத்திற்கு எந்த தொந்தரவும் தரவில்லை.
தற்போது ரங்கசாமி மாநில அந்தஸ்துக்காக  பிரதமரை சந்திக்க எம்எல்ஏக்களை டெல்லி அழைத்து செல்வாரா? என்னையும், வைத்திலிங்கம் எம்பி, மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோரை கட்சி மாறியுள்ள அமைச்சர் லட்சுமிநாராயணன் மண் குதிரைகள் என எங்களை கூறியுள்ளார். இந்த மண் குதிரைகள்தான், அவருக்கு காங்கிரசில் சீட் கொடுத்தது. 

இதேபோல் தொடர்ந்து பேசி வந்தால் அவரின் தோலை உரிப்பேன். அவரது ரகசியங்களை வெளியிடுவோம். அவரது பல ரகசியங்கள் எங்களிடம் உள்ளன. நான் விடுதலைபுலியை பார்த்தவன். ரங்கசாமி மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால், இந்த 3 மண் குதிரைகளும் காங்கிரஸ் தொண்டர்களோடு போராட்டத்தில் பங்கேற்க தயார். அதே நேரத்தில் ரங்கசாமி போராட தயாரா” என்று கேள்வி எழுப்பினார்.